4338. | 'தேவியைக் குறித்துச் செற்ற சீற்றமும், மானத் தீயும், ஆவியைக் குறித்து நின்றது, ஐயனை; அதனைக் கண்டேன்; கோ இயல் தருமம் நீங்க, கொடுமையோடு உறவு கூடி, பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன்; பழியும் பாரேன். |
தேவியைக் குறித்து - சீதையை (இராவணன் கவர்ந்து சென் றதை)க் குறித்து; செற்ற சீற்றமும் - கறுவு கொண்ட சினமும்; மானத் தீயும் - மானமாகிய நெருப்பும்; ஐயனை ஆவியை - இராமனது உயிரை; குறித்து நின்றது - பற்றி வருத்தி நின்றன; அதனைக் கண்டேன் - அவ்வாறு வருத்துவதை (நேரிலே) கண்ட நான்; கோ இயல் தருமம் நீங்க - அரசர்களுக்குரிய தருமம் அழிய; கொடுமையோடு உறவு கூடி - கொடுந்தன்மையோடு உறவு கொண்டாடி; பாவியர்க்கு ஏற்ற செய்கை - கொடிய பாவியர்க்குரிய செயல்களை; கருதுவன் - செய்யக் கருதியுள்ளேன்; பழியும் பாரேன் - (அதனால் எனக்கு வரக் கூடிய) பழியையும் சிறிதும் கருதமாட்டேன். இராவணன் சீதையைக் கவர்ந்த செயல் இராமனை மிக வருத்தியது. அதனை நேரில் கண்ட இலக்குவன் தனக்கு நேரும் சீற்றத்தையும்; அதன் விளைவுகளையும் எடுத்துரைக்கின்றான். காலம் பார்த்துச் சினம் ஆறியிருத்தல் அரசனுக்குக் கடமையாயிருக்க, இராமனுக்கு நேர்ந்த துன்பங்களைக் கண்டு, ஆற்றாமல் இலக்குவன் 'கோவியல் தருமம் நீங்க... பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன்' என்றான். 70 |