4342. | 'தாழ்வித்தீர் அல்லீர்; பல் நாள் தருக்கிய அரக்கர்தம்மை வாழ்வித்தீர்; இமையோர்க்கு இன்னல் வருவித்தீர்; மரபின் தீராக் கேள்வித் தீயாளர் துன்பம் கிளர்வித்தீர்; பாவம்தன்னை மூள்வித்தீர்; முனியாதானை முனிவித்தீர், முடிவின்' என்றான். |
தாழ்வித்தீர் அல்லீர் - 'நீங்கள் கால தாமதம் செய்தவர்கள் மட்டு மில்ை; பல்நாள் தருக்கிய - பலநாட்களாகச் செருக்குக் கொண்டிருந்த; அரக்கர்தம்மை வாழ்வித்தீர் - அரக்கர்களை வாழச் செய்தீர்கள்; இமையோர்க்கு - தேவர்களுக்கு; இனனல் வருவித்தீர் - துன்பத்தைத் தந்தீர்கள்; மரபின் தீராக் கேள்வித் தீயாளர் துன்பம் - மரபு முறையிலிருந்து நீங்காத நூற்கேள்வியும், வேள்வி்த் தீயுமுடைய முனிவர்களுக்குத் துன்பத்தை; கிளர்வித்தீர் - மிகுதியாக்கினீர்கள்; பாவம் தன்னை - பாவங்களை; மூள்வித்தீர் - மேலும் மேலும் வளரச் செய்தீர்கள்; முடிவின் - முடிவாக; முனியாதானை - ஒருகாலும் கோபிக்காத இராமனையும்; முனிவித்தீர் - கோபம் அடையுமாறு செய்தீர்கள்'; என்றான் - என்று (இலக்குவன்) கூறினான். உங்கள் காலதாமதம் அரக்கர்க்குப் பெருவாழ்வையும், தேவர்க்கும் முனிவர்க்கும் துன்பததையும் உண்டாக்கி; உங்களுக்குப் பாவங்களைச் சேர்த்து; இராமனுக்குச் சினத்தைத் தோற்றுவித்து, உங்களது கேட்டிற்கும் காரணமாகியது என்று இலக்குவன் உரைத்தான் என்பது. 'கேள்வி' என்பது வேதம்; கேள்வித் தீயாளர், வேத வேள்விக்குத் தீ ஓம்பும் வேதியர் மற்றும் முனிவர்கள். தாழ்வித்தீர், வாழ்வித்தீர், வருவித்தீர், கிளர்வித்தீர், மூள்வித்தீர், முனிவித்தீர் என்று 'வி' விகுதியைச் சேர்த்துப் பிறவினைகளாகவே அமைத்திருப்பது சிந்திக்கத்தக்கது. உங்களால் தான் இவ் விளைவுகள் அனைத்தும் ஏற்பட்டன என்பதை இப் பிறவினைகளால் நன்கு வலியுறுத்துகிறார்கவிஞர். 74 |