அனுமன் இலக்குவனைச் சுக்கிரீவனிடம் வருமாறு அழைத்தல்

4343.தோன்றல் அஃது உரைத்தலோடும்,
      மாருதி தொழுது, 'தொல்லை
ஆன்ற நூல் அறிஞ! போன
      பொருள் மனத்து அடைப்பாய் அல்லை;
ஏன்றது முடியேம்என்னின், இறத்தும்;
      இத் திறத்துக்கு எல்லாம்
சான்று இனி அறனே; போந்து,
     உன் தம்முனைச் சார்தி' என்றான்.

     தோன்றல் - காண்பதற்கு இனியவனான இலக்குவன்; அஃது
உரைத்தலோடும் -
அவ் வார்த்தைகளைச் சொன்னவுடனே; மாருதி தொழுது
-
வாயு மைந்தனான அனுமன் (இலக்குவனை) வணங்கி; தொல்லை ஆன்ற
நூல் அறிஞ -
பழமையான சிறந்த நூல்களை அறிந்தவனே; போன பொருள்
-
நடந்து முடிந்த செய்திகளை; மனத்து அடைப்பாய் அல்லை - மனத்தில்
கொள்ளாதிருப்பாயாக; ஏன்றது முடியேம் என்னின் - (நாங்கள்)
ஏற்றுக்கொண்ட பணியைச் செய்யாது விடுத்தோமாயின்; இறத்தும் -
உயிர்விடக் கடவோம்; இத் திறத்துக்கு எல்லாம் - இந்த வகைச்
செய்திகளுக்கெல்லாம்; இனி அறனே சான்று - இனிச் சாட்சியாக இருப்பது
தருமமே; போந்து - உள்ளே வந்து; உன் தம்முனை - உனக்கு அண்ணன்
முறையாகும் சுக்கிரீவனிடம்; சார்தி என்றான் - சோர்வாய் என்று
சொன்னான்.

     அனுமன் இலக்குவனது சினத்தைத் தணிக்க விரும்பிச் 'சீதையைத்
தேடுதல் முதலான செயல்களைத் தவறாது செய்துமுடிப்போம்; அவ்வாறு
முடியாவிட்டால் நாங்கள் இறந்துபடுவோம்; இச் செயலுக்கு தருமமே சாட்சி'
என்றான் என்பது.

     சான்று இனி அறனே: நாங்கள் அறம் திறம்பினோம் என்று நீங்கள்
இனியும் எங்களைக் கொல்ல வேண்டா.  ஏனென்றால் அறமே எங்களைக்
கொன்று விடும்.  மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் மற்றவன்
கேடு (குறள் - 204) ஆன்ற - சான்ற என்பதன் மரூஉ.  தோன்றல் -
பெருமையாளன். ஆண்பாற் சிறப்புப் பெயர்.                         75