இலக்குவன் சினத்திற்குக் காரணம் என்ன எனச்சுக்கிரீவன் வினவுதல் 4347. | போனபின், தாதை கோயில் புக்கு, அவன் பொலம் கொள் பாதம் தான் உறப் பற்றி, முற்றும் தைவந்து, 'தடக் கை வீர! மானவற்கு இளையோன் வந்து, உன் வாசலின் புறத்தான்; சீற்றம் மீன் உயர் வேலைமேலும் பெரிது; இது விளைந்தது' என்றான். |
போனபின் - இலக்குவனைவிட்டு (அங்கதன்) நீங்கிச்சென்ற பிறகு; தாதை கோயில் புக்கு - சிற்றப்பனாகிய சுக்கிரீவனது அரண்மனைக்குள் புகுந்து; அவன் பொலம்கொள் பாதம் - அச் சுக்கிரீவனுடைய பொன்போன்ற (அழகான) பாதகங்களை; தான் உறப் பற்றி - தான் நன்றாகப் பிடித்துக் கொண்டு; முற்றும் தைவந்து - முழுவதும் தடவி (துயிலெழுப்பி); தடக்கை வீர - நீண்ட கைகளையுடைய வீரனே; மானவற்கு இளையோன் வந்து - இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவன் வந்து; உன் வாசலின் புறத்தான் - உனது அரண்மனை வாயில் வெளியிலே நிற்கின்றான்; சீற்றம் - (அவன் இப்பொழுது கொண்டுள்ள) சினமானது; மீன் உயர் வேலை மேலும் பெரிது - மீன்கள் நிறைந்துள்ள கடலைக் காட்டிலும் பெரியது; இது விளைந்தது - இது நடந்த செய்தி; என்றான் - என்று கூறினான். பொலம் - பொன், அழகு. தைவருதல் - தடவுதல். மானவன் - பெருமையுள்ளவன். 79 |