4351.'ஆண்தகை, அதனை நோக்கி, அம்
      மலர்க் கமலத் தாளால்
தீண்டினன்; தீண்டாமுன்னம், தெற்கொடு
      வடக்குச் செல்ல
நீண்ட கல் மதிலும், கொற்ற
      வாயிலும், நிரைத்த குன்றும்,
கீண்டன தகர்ந்து, பின்னைப்
      பொடியொடும் கெழீஇய அன்றே.

     ஆண்தகை - ஆடவருள் சிறந்தவனான இலக்குவன்; அதனை நோக்கி
-
வானரர்களின் அந்தச் செயலைப் பார்த்து; அம் கமல மலர்த் தாளால்
தீண்டினன் -
அழகிய செந்தாமரை மலர் போன்ற தனது காலால் (அடைத்த
வாயில் கதவை) உதைத்தான்; தீண்டாமுன்னம் - (அத்திருவடி) படுவதற்கு
முன்பே; தெற்கொடு வடக்குச் செல்ல - தென்வடலாகப் பரவி; நீண்ட கல்
மதிலும் -
நீண்டுள்ள கல்லால் ஆகிய மதில்களும்; கொற்ற வாயிலும் -
வெற்றி பொருந்திய நகரவாயிலும்; நிரைத்த குன்றும் - வரிசையாக அடுக்கி
வைத்த குன்றுகளும்; தகர்ந்து கீண்டன - உடைந்து சிதறினவாகி; பின்னை -
பின்பு; பொடியொடும் கெழீஇய - பொடியுடன் கலந்து ஒன்றாயின.

     அன்றே - ஈற்றசை; தீண்டாமுன்னம் தகர்ந்து கீண்டன - மிகையுயர்வு
நவிற்சியணி.  கீண்டன - கிழிந்தன, உடைந்தன, 'தகர்ந்து கீண்டன' என்பதைக்
கீண்டு தகர்ந்தன எனப் பிரித்துக் கூட்டிப் பிளந்து உடைந்தன எனவும்
பொருள் கொள்ளலாம்.  பிளப்பது முதலில் தகர்வதுபின்னால்.           83