4353. | 'மங்கையர் மேனி நோக்கான், மைந்தனும், மனத்து வந்து பொங்கிய சீற்றம் பற்றிப் புகல்கிலன்; பொருமி நின்றான்; நங்கையும், இனிது கூறி, ''நாயக! நடந்தது என்னோ, எங்கள்பால்?'' என்னச் சொன்னாள்; அண்ணலும் இனைய சொன்னான். |
மைந்தனும் - வீரனான இலக்குவனும்; மங்கையர் மேனி நோக்கான்- (இவ்வாறு வழியில் நின்ற தாரை முதலிய) பெண்களின் உரு வத்தை நிமிர்ந்தும் பாராதவனாய்; மனத்து வந்து பொங்கிய - தன் மனத்திலே எழுந்து பொங்கி நின்ற; சீற்றம் பற்றிப் புகல்கிலன் - சினத்தால் ஒன்றும் சொல்ல மாட்டாதவனாய்; பொருமி நின்றான் - விம்மி நின்றான்; நங்கையும்- பெண்களில் சிறந்தவளான (எனது தாயாகிய) தாரையும்; இனிது கூறி - (இலக்குவனது கோபம் தணியுமாறு) இனிய சொற்களைச் சொல்லி (அவனைப்பார்த்து); நாயக- 'தலைவனே! எங்கள்பால் நடந்தது என்னோ- (நீஇராமனை விட்டுப் பிரிந்து) எங்களிடம் வந்தது எதற்காக?'என்னச் சொன்னாள் - என்று கேட்டாள்; அண்ணலும் - இளைவனான இலக்குவனும்; இனைய சொன்னான் - வந்த காரணத்தைக் கூறினான். மங்கையர் மேனி நோக்கான் - அயல் மாதரைக் கண்ணெடுத்துப் பாராத நோன்புடையவன் இலக்குவன் என்பது அறியப்படும். 85 |