'இலக்குவன் வரவை முன்னமே தெரிவியாமை ஏன்' என வினாதல் 4355. | சொற்றலும், அருக்கன் தோன்றல் சொல்லுவான், 'மண்ணில் விண்ணில் நிற்க உரியார்கள் யாவர், அனையவர் சினத்தின் நேர்ந்தால்? விற்கு உரியார், இத் தன்மை வெகுளியின் விரைவின் எய்த, எற்கு உரையாது, நீர் ஈது இயற்றியது என்கொல்?' என்றான். |
சொற்றலும் - (அவ்வாறு அங்கதன்) சொன்னவுடனே; அருக்கன் தோன்றல் - சூரியன் மகனான சுக்கிரீவன்; சொல்லுவான் - (பின்வருமாறு) சொல்லத் தொடங்கினான்; அனையவர் சினத்தின் நேர்ந்தால் - 'அந்த இராமலக்குவர் கோபம் கொண்டு எதிர்த்து வந்தால்; மண்ணில் விண்ணில் - இந்த நிலவுலகத்திலோ வானுலகத்திலோ; நிற்க உரியார்கள் யாவர் - அவர்களை எதிர்த்து நிற்கக் கூடியவர்கள்யார்?விற்கு உரியார் - வில் வீரராகிய அந்த இலக்குவன்; இத் தன்மை வெகுளியின் - இவ்வாறு கோபத்துடன்; விரைவின் எய்த - விரைந்து வரும்படியாக; எற்கு உரையாது - (அதனை) எனக்குத் தெரிவிக்காமல்; நீர் ஈது - நீங்கள் இவ்வாறு; இயற்றியது என்கொல் - செய்தது என்ன காரணம் பற்றி?' என்றான் - என்று (அங்கதனை) வினவினான். எவ்வுலகத்திலும் ஈடில்லாத மகாவீரர் இராமலக்குவர் என்பதை அறியாமல் வாயில் அடைத்து இலக்குவனோடு போர் செய்ய நின்றதும், அந்த இலக்குவன் பெருங்சினத்தோடு வந்தபோது தனக்கு முன்னமே தெரிவியாதிருந்ததும் தவறு என்று சுக்கிரீவன் குறிப்பித்தான் என்பது. ஈது இயற்றியது - கதவடைத்துக் கற்கள் அடுக்கியது முதலான செயல்களைக்குறிக்கும். 87 |