4358.'ஏயின இது அலால், மற்று,
      ஏழைமைப் பாலது என்னோ?
''தாய் இவள், மனைவி'' என்னும் தெளிவு
      இன்றேல், தருமம் என் ஆம்?
தீவினை ஐந்தின் ஒன்று ஆம்;
     அன்றியும், திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றாம்; மயக்கின்மேல்
      மயக்கும் வைத்தாம்!

     ஏயின இது அலால் - (இப்பொழுது) என்னிடம் பொருந்திய இந்தக்
குடிமயக்கம் தவிர; மற்று ஏழைமைப் பாலது என்னோ - வேறு
அறியாமையில் சேரும் செயல் என்ன உள்ளது? (இவ்வாறு கள் குடிப்பதால்);
தாயிவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் -
தாயென்றும்
மனைவியென்றும் (வேறுபாடு அறியும்) அறிவு இல்லையென்றால்; தருமம் என்
ஆம் -
மற்றையு தருமங்கள் (கள் குடிப்பவனிடம்) இருந்தும் என்ன பயன்?
(இவ்வாறு கள்ளுண்டு மயங்குதல்); தீவினை ஐந்தின் - ஐந்து பெரும்
பாதகங்களுள்ளே; ஒன்று ஆம் - ஒன்றாகும்; அன்றியும் - அல்லாமலும்;
திருக்கு நீங்கா -
வஞ்சனை நீங்காத; மாயையின் மயங்குகின்றாம் -
மாயையின் வசப்பட்டு மயங்ககின்ற நாம்; (அந்த மயக்கத்தைப் போக்கும்
வல்லமை இல்லாதிருக்க); மயக்கின் மேல் - ஒரு மயக்கத்தின் மேல்;
மயக்கும் வைத்தாம் -
(மதுவாகிய) மற்றொரு மயக்கத்தை
ஊட்டியவர்களானோம்.

     எவ்வகையிலும் காக்க முடியாத குற்றம் செய்தேனெனச் சுக்கிரீவன்
கழிவிரக்கம் கொண்டான்.  பிறவியும் அதைச் சார்ந்த பிறவும் மாயையின்
விளைவுகள் என்பது தத்துவம்.  இயல்பாகவே பொருந்தியுள்ள அந்த
மாயைக்கு மேல் மற்றொரு மாயையாக மதுவருந்தும் மயக்கத்தைக் கைக்
கொண்டதாகக் சுக்கிரீவன் வருந்துகின்றான்.  மது என்பது தன்னைக்
குடித்தவனது அறிவைக் கெடுத்து அவனிடத்திலுள்ள பிற தருமங்களையும்
கெடுத்துவிடும் என்பதால் தாய் இவள், மனைவி என்னும் தெளிவு இன்றேல்
என்றார்.  ஐம்பெரும் பாதகங்கள்; கொலை, களவு, கள்ளுண்டல், பொய் கூறல்,
காமம். ஏயின - ஏய் என்ற பகுதியடியாகப் பிறந்தபெயரெச்சம்.          90