4359. | ' ''தெளிந்து தீவினையைச் செற்றார் பிறவியின் தீர்வர்'' என்னா, விளிந்திலா உணர்வினோரும், வேதமும், விளம்பவேயும், நெளிந்து உறை புழுவை நீக்கி, நறவு உண்டு நிறைகின்றேனால் - அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின். |
தெளிந்து தீவினையைச் செற்றார் - மனம் தெளிந்து தீச்செயல்கள் செய்வதை விட்டவர்; பிறவியின் தீர்வர் - பிறவித் துன்பத்திலிருந்து நீங்கினவர் ஆவர்; என்னா - என்று; விளிந்திலா உணர்வினோரும் - அழியாத அறிவுடைய தத்துவ ஞானிகளும்; வேதமும் - நான்மறைகளும்; விளம்பவேயும் - சொல்லியிருக்கவும் (உணர்வில்லாமல்); அகத்து அளிந்து எரியும் தீயை - வீட்டில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பை; நெய்யினால் அவிக்கின்றாரின் - நெய்யைக் கொண்டு அணைக்கத் தொடங்குகின்றவரைப் போல; நெளிந்து உறை - நெளிந்து கொண்டு அதில் தங்கியுள்ள; புழுவை நீக்கி - புழுக்களை எடுத்தெறிந்து விட்டு; நறவு உண்டு - கள்ளைக் குடித்து; நிறைகின்றேன் - களிப்பில் மூழ்கி வாழ்வில் (போலியான) நிறைவு காணுகின்றேன் நான். மூண்டெரியும் நெருப்பில் நெய்யைச் சொரிந்தால் அந்த நெருப்பு அவியாது, மேன்மேல் வளருவதுபோல, இயற்கையில் மாயைக்கு வசப்பட்டுத் தீவினையில் உழல்கின்றவர் கட்குடிப்பதையும் மேற்கொள்வது தீவினை வளர்வதற்கே காரணமாய் முடியுமென்பது. 'நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்போம் எனல்' - (குறள்:1148) 91 |