4360. | ' ''தன்னைத் தான் உணரத் தீரும், தகை அறு பிறவி'' என்பது என்னத் தான் மறையும் மற்றத் துறைகளும் இசைத்த எல்லாம், முன்னை, தான் தன்னை ஓரா முழுப் பிணி அழுக்கின் மேலே, பின்னைத் தான் பெறுவது, அம்மா! நறவு உண்டு திகைக்கும் பித்தோ? |
தன்னைத் தான் உணர - (ஒருவன்) தன்னைத் தான் உணர்ந்த மாத்திரத்தில்; தகை அறு பிறவி என்பது தீரும் - பெருமையற்ற பிறவி என்ற பிணி நீங்கும்; என்னத்தான் - என்றே; மறையும் - வேதங்களும்; மற்றத் துறைகளும் - பிற வேதாங்கம் சாத்திரம் முதலியனவும்; இசைத்த எல்லாம் - சொல்லியவற்றையெல்லாம்; தான் தன்னை ஓரா - தான் தன்னுடைய உண்மை வடிவை உணராததால் உண்டாகும்; முழுப் பிணி அழுக்கின் மேலே - நிறைந்த நோயுடைய அழுக்குடம்பைப் பெற்றிருத்தலோடு; பின்னை - மேலும்; நறவு உண்டு - கள்ளைக் குடித்து; முன்னைத் திகைக்கும் பித்து பெறுவது- முன்னம் மனம் மயங்குகின்ற போதையைப் பெறுதலும் தகுதியாகுமோ? பிறவித் துன்பம் நீங்கத் தன்னை உணர்தல் இன்றியமையாததாயிருக்க, அந்த அறிவின்மையோடு கள் மயக்கத்தையும் பெறுவது என்ன விந்தை எனக் கூறியது. தன்னைத் தானுணர்தல் - மெய்யறிவு பெறல். சுக்கிரீவன் தன்னைத்தான் உள்ளபடி உணராதது முதற்குற்றமென்றும் அதன்மேலும் கள்ளைக் குடித்தது இரண்டாவது குற்றமென்றும்குறித்தான். 92 |