4361. | 'அளித்தவர், அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர், அறிவில் மூழ்கிக் குளித்தவர், இன்ப துன்பம் குறைத்தவர், அன்றி, வேரி ஒளித்தவர் உண்டு, மீண்டு, இவ் உலகு எலாம் உணர ஓடிக் களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ? |
அளித்தவர் - (அபயம் என்று அடைந்தவரைப்) பாதுகாத்தவரும்; அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் - ஐம்பொறிகளையும் மனத்தில் அடக்கியவர்களும்; அறிவில் மூழ்கிக் குளித்தவர் - தத்துவ ஞானத்தில் ஆழ்ந்திருப்பவரும்; இன்பம் துன்பம் குறைத்தவர் - இன்ப துன்பங்களில் விருப்பு வெறுப்பு அற்றவரும்; (சுக துக்கங்களைச் சமமாகக் கருதுபவர்); அன்றி - ஆகியோரைத் தவிர; வேரி ஒளித்தவர் உண்டு - கள்ளை மறைவாகக் குடித்து; மீண்டு - பின்பு; இவ் உலகு எலாம் உணர - இந்த உலகத்தவர் அனைவரும் அறியும்படி; ஓடிக்களித்தவர் - ஓடிக் களிப்புக் கொண்டவர்; எய்தி நின்ற - அடைந்துள்ள; கதி ஒன்று - ஒரு நற்கதியை; கண்டது உண்டோ - (யாரேனும்) பார்த்ததுண்டோ? அஞ்சி வந்து அடைந்தவரை அபயமென்று காத்தலும் ஐம்பொறிகளை வசப்படுத்துதலும், தத்துவ அறிவு நிரம்புதலும், சுக துக்கங்களை ஒரு நிகராகக் கருதுவதும் ஆகிய இவையே நற்கதியடைவதற்குரிய வழிகளாகுமேயல்லாமல், கள் குடித்தலால் ஒருகாலும் நற்கதியுண்டாகாது என்பது. ஐம்பொறிகளை மனத்தில் அடக்குவது: ஐம்பொறிகளைப் புலன்களின்மேல் செல்லவொட்டாது தடுத்து வைத்தல். வேரி: பாளை முதலியவற்றினின்று குடைந்தெடுக்கப்பட்ட மது, அஞ்சு - ஐந்து என்பதன் போலி. 93 |