4368. தூய திண் பளிங்கின் செய்த
     சுவர்களின் தலத்தில், சுற்றில்,
நாயக மணியின் செய்த நனி
      நெடுந் தூணின் நாப்பண்,
சாயை புக்கு உறலால், கண்டோர்
      அயர்வுற, 'கை விலோடும்
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர்'
      எனப் பொலிந்தது அவ் ஊர்.   *

     அவ் ஊர் - அந்தக் கிட்கிந்தா நகரமானது; தூய திண் பளிங்கின்
செய்த -
தூயஉறுதியான படிகக் கற்களால் செய்யப்பட்ட; சுவர்களின்
தலத்தில் -
சுவர்களின் இடங்களிலும்; சுற்றில் நாயக மணியின் செய்த -
சுற்றுப் புறங்களிலும், சிறந்த நவமணிகள் இழைத்துச் செய்த; நனி நெடுந்
தூணின் நாப்பண் -
மிக உயர்ந்த தூண்களின் இடையிலும்; சாயை புக்கு
உறலால் -
(இலக்குவனது) நிழல் சென்று பொருந்துவதால்; கண்டோர்
அயர்வுற -
பார்த்தவர் யாவரும் மாறாக நினைக்கும்படி; கை விலோடும் -
கையில் தாங்கிய வில்லுடனே; ஆயிரம் மைந்தர் - ஆயிரம் வீரர்கள்;
வந்தார் உளர் என -
வந்துள்ளார்கள் என்று கருதும்படி; பொலிந்தது -
விளங்கியது.

     இலக்குவன் செல்லுகின்ற இடங்களிலுள்ள பளிங்குச் சுவர்களிலும்,
இரத்தினத் தூண்களிலும் அவனது சாயை ஆயிரக் கணக்காகத் தோன்றியதால்,
பல வீரர் திரண்டு வந்தார்களோ என்று ஐயுறும்படி அந்த ஊர் விளங்கியது
என்பது.  நாயகம் - தலைமை.தற்குறிப்பேற்றவணி.                    100