சுக்கிரீவனைக் கண்டவுடன் எழுந்த சீற்றத்தை இலக்குவன் ஆற்றிக் கொள்ளுதல் கலிவிருத்தம் 4373. | தோற்றிய அரிக் குலத்து அரசை, தோன்றலும், ஏற்று எதிர்நோக்கினன்; எழுந்தது, அவ் வழிச் சீற்றம்; அங்கு; அதுதனை, தெளிந்த சிந்தையால் ஆற்றினன், தருமத்தின் அமைதி உன்னுவான். |
தோன்றலும் - சிறந்தவனான இலக்குவனும்; தோற்றிய அரிக் குலத்து அரசை - (எதிரில்) காணப்பட்ட வானர குலத்து அரசனான சுக்கிரீவனை; ஏற்று எதிர் நோக்கினன் - வரவேற்று எதிரே பார்த்தான்; அவ்வழிச் சீற்றம் எழுந்தது - அப்போது (இலக்குவனுக்குச்) சினம் மூண்டது; தருமத்தின் அமைதி உன்னுவான் - தருமத்தின் நிலைமையைக் கருதுபவனான அந்த இலக்குவன்; அங்கு அதுதனை - அந்த இடத்தில் அந்தச் சினத்தை; தெளிந்த சிந்தையால் - தெளிவான தனது மனத்தினால்; ஆற்றினன் - தணித்துக் கொண்டான். தங்கள் திறத்தில் குறித்த தவணைப்படி வாராது தவறிய சுக்கிரீவன் எதிர்ப்பட்ட அளவில் இலக்குவனுக்குச் சினம் மூண்டதை இப்பாடல் சுட்டும். தாரை, அனுமன், அங்கதன் ஆகியோரால் இலக்குவனின் சினம் பெரும்பாலும் தணிந்தது என்பதும், அது முற்றிம் நீங்கவில்லை என்பதும் சுக்கிரீவனைக் கண்டதும் தருமத்தின் அமைதி உன்னியும், இராமன் முன்கூறியதை ஒட்டியும் தன் தெளிந்த சிந்தையால் அச்சினத்தை மாற்றினான் என்பதும் இங்கு அறியத் தக்கன. இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று - (குறள் - 308) 'காயும் கதமின்மை நன்று' (நாலடியார் - சினமின்மை: 1) 'நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று' - (நாலடி. சினமின்மை: 7) என்பன ஒப்புநோக்கத்தக்கன. 105 |