அமுது உண்ணுமாறு சுக்கிரீவன் கேட்க, இலக்குவன் மறுத்தல்

4379.'மஞ்சன விதிமுறை
      மரபின் ஆடியே,
எஞ்சல் இல் இன் அமுது
      அருந்தின், யாம் எலாம்
உய்ஞ்சனம் இனி' என
      அரசு உரைத்தலும்,
அஞ்சன வண்ணனுக்கு
      அனுசன் கூறுவான்:

     அரசு - சுக்கிரீவ மன்னன் (இலக்குவனைப் பார்த்து); விதி முறை
மரபின் -
'நூல்களில் கூறிய முறைப்படியே; மஞ்சனம் ஆடியே - நீராடி;
எஞ்சல் இல் -
குறைதல் இல்லாத (சுவையான); இன் அமுது அருந்தின் -
இனிய உணவை உண்டால்; யாம் எலாம்- நாங்கள் எல்லாரும்; இனி
உய்ஞ்சனம் -
நல்வாழ்வு பெற்றவர்களாவோம்; என உரைத்தலும் - என்று
சொல்லிய அளவில்; அஞ்சன வண்ணனுக்கு அனுசன் - மையையொத்த
கரிய நிறத்தவனான இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவன்; கூறுவான் -
சொல்லலானான்.

     'இலக்குவனே! நீ நீராடி யுணவுண்டால் நாங்கள் உய்வோமெனச்
சுக்கிரீவன் முகமன் கூறினான் என்பது.  மரபு - இடத்திற்கேற்பது 'அனுசன் -
அனுஜன்: பின் பிறந்தவன் எனப் பொருள் தரும் வடசொல். உய்ஞ்சனம் -
உய்ந்தனம்: போலி; கால வழுவமைதி.  அமுது (உணவு) - உவமையாகு பெயர்.
                                                            111