4382. | 'பச்சிலை, கிழங்க, காய், பரமன் நுங்கிய மிச்சிலே நுகர்வது; வேறு நான் ஒன்றும் நச்சிலேன்; நச்சினேன் ஆயின், நாய் உண்ட எச்சிலே அது; இதற்க ஐயம் இல்லையால்.' |
பச்சிலை - 'பசிய இலைகளும் (கீரைகளும்); கிழங்கு காய் - கிழங்குகளும் காய்களும் (ஆகிய இவற்றில்); பரமன் நுங்கிய மிச்சிலே - சிறந்தவனான இராமன் அமுது செய்து எஞ்சியதையே; நான்நுகர்வது - நான் உண்பது (அதைத் தவிர); வேறு ஒன்றும் நச்சிலேன் - வேறு எப்பொருளையும் விரும்பமாட்டேன்; நச்சினேன் ஆயின் - ஒருகால் விரும்பினேனானால்; அது நாய் உண்ட எச்சிலே - அது நாய் தின்று போட்ட எச்சிலேயாகும்; இதற்க ஐயம் இல்லை - இதில் ஐயமே யில்லை.' கானகத்தில் இலக்குவன் வாழ்ந்த பாங்கினை விளக்குதற்கு மிக வாய்ப்பான இடமாகக் கம்பர் இந்த சூழலைப் பயன்படுத்தியிருக்கிறார். மெல்லணையில் அமராமல் கல் தரையில் இலக்குவன் அமர்ந்ததைக் கண்டபோது அவன்தன் அன்புநிலை கண்டு அவலம் உற்றனர். நல்லுணவேனும் கொள்ளக் கூடாதா எனற ஆதங்கத்தில் 'நீ அமுது கொண்டால் நாங்கள் உய்ந்தோமாவோம் (4379) என்று சுக்கிரீவன் சொல்லினான். உறங்காவில்லியாகிய இலக்குவனின் கைங்கரியச் செல்வம் புறச்செயல்களால் மட்டும் விளைந்ததன்று. உள்ளார்ந்த / உயிரார்ந்த உணர்விலேயே இராமனின் நலமன்றி வேறு கருதாதவன் இளைய பெருமாள். இராமனுக்குத்தான் தவவாழ்க்கை என்பது கைகேயியின் நியமனம்; இலக்குவன் அதனை வலிய மேற்கொண்டான். எந்த அளவுக்கு? இராமன் உண்பது கிழங்கும் காயுமே; அவன் உண்டதில் மிச்சம் இருந்தால், அதுவே இலக்குவன் உணவு. அந்த மிச்சில் தவிர வேறு எதனை உண்டாலும் நாய் உண்டு. எஞ்சிய எச்சிலாகவே இலக்குவன் கருதியிருக்கிறான். இலக்குவனின் பெருமிதப்பாங்கு அடுத்த பாடலிலும் தொடர்கிறது. 114 |