4386.'போயின தூதரின் புகுதும் சேனையை,
நீ உடன் கொணருதி, நெறி வலோய்!' என,
ஏயினன், அனுமனை, 'இருத்தி ஈண்டு' எனா,
நாயகன் இருந்துழிக் கடிது நண்ணினான்

     நெறி வலோய் - (சுக்கிரீவன் அனுமனைப் பார்த்து) நீதி நெறிகளில்
வல்லவனே; போயின தூதரின் - (முன்பு கட்டளையிட்ட படி)
சென்றுள்ள தூதர்களோடு; புகுதும் சேனையை - இனி வரும் வானர
சேனையை; நீ உடன் கொணருதி - நீ உன்னோடு அழைத்து வருக; என -
எனவும்; ஈண்டு இருத்தி - (அதுவரை நீ) இங்கேயே இருப்பாய்; எனா -
எனவும்;அனுமனை ஏயினன் - அனுமனுக்குக் கட்டளை யிட்டவனாய்;
நாயகன் இருந்துழி -
தலைவனான இராமன் தங்கியிருந்த இடத்திற்கு; கடிது
நண்ணினான் -
விரைந்து போகலானான்.

     தூதரின் - உருபு மயக்கம்.  இருந்த உழி என்பது இருந்துழி எனத்
தொக்கு வந்தது.  ஏயினன் - முற்றெச்சம்.                           118