4390. | பொன்னினின், முத்தினின், புனை மென் தூசினின், மின்னின மணியினின், பளிங்கின், வெள்ளியின், பின்னின; விசும்பினும் பெரிய; பெட்புறத் துன்னின, சிவிகை; வெண் கவிகை சுற்றின. |
பொன்னினின் - பொன்னாலும்; முத்தினின் - முத்துக்களாலும்; புனை மெல்தூசினின் - அழகிய மெல்லிய ஆடைகளாலும்; மின்னின மணியினின் - ஒளிவிடுகின்ற மணிகளினாலும்; பளிங்கின் வெள்ளியின் - படிகக் கற்களாலும் வெள்ளியினாலும்; பின்னின சிவிகை - செய்யப்பட்டவனாகிய பல்லக்குகள்; விசும்பினும் பெரிய - ஆகாயத்தைவிட மிக விரிந்தனவாய்; பெட்புறத் துன்னின - யாவரும் விரும்பும்படி நெருங்கிவந்தன; வெண் கவிகை - வெண்கொற்றக் குடைகள்; சுற்றின - சுழன்று வந்துன. குடைகள், அகன்ற ஆகாயம் முழுவதையும் மறைத்தலால் 'விசும்பினும் பெரிய' என்றார். விரிவு அல்லது அகற்சிக்கே விசும்பு உவமையாக்கப் பெறும். 122 |