4394. | பிறிவு அருந் தம்பியும் பிரிய, பேர் உலகு இறுதியில் தான் என இருந்த ஏந்தலை, அறை மணித் தாரினோடு, ஆரம் பார் தொட, செறி மலர்ச் சேவடி முடியின் தீண்டினான். |
பிறிவு அருந் தம்பியும் - பிரியாது எப்போதும் உடனிருக்கும் தம்பியாகிய இலக்குவனும்; பிரிய - பிரிந்து சென்றதால்; பேருலகு இறுதியில் - பெரிய உலகங்கள் யாவும் அழிந்துபடும் ஊழி இறுதியில்; தான் என இருந்த - (தனித்து நிற்கும்) திருமாலாகிய தன்னைப் போன்று தனிப்பட்டிருந்த; ஏந்தலை - இராமபிரானை; (சுக்கிரீவன்); அறை மணித் தாரினோடு ஆரம் - (தனது மார்பில் பூண்ட) ஒலிக்கின்ற மணி மாலைகளும் முத்து மாலைகளும்; பார் தொட - பூமியில் படும் படி; செறி மலர் சே அடி - அடர்ந்த செந்தாமரை மலர் போன்ற சிவந்த திருவடிகளை; முடியின் தீண்டினான் - தனது தலையினால் தொட்டான் (திருவடிகள் சிரத்தில் படுமாறு வணங்கினான்). பிரளயத்தின் இறுதியில் திருமால் தனியே தன்னைத் தானே பார்த்திருத்தலாகிய உண்மை இங்குக் கூறப்பட்டது. எப்போதும் பிரியாது உடனுறையும் தம்பியாகிய இலக்குவனையும் பிரிந்து தனித்திருக்கும் இராமனுக்கு யுகாந்த காலத்தில் தான்மட்டும் தனித்திருக்கும் திருமாலை உவமைகூறினார். 126 |