இராமன் சுக்கிரீவனை நலன் உசாவுதல்

4395. தீண்டலும், மார்பிடைத்
     திருவும் நோவுற,
நீண்ட பொன் தடக்
      கையால் நெடிது புல்லினான்;
மூண்டுஎழு வெகுளி
      போய் ஒளிப்ப, முன்புபோல்
ஈண்டிய கருணை தந்து,
     இருக்கை ஏவியே,

     தீண்டலும் - (சுக்கிரீவன் தன்னை) வணங்கியவுடனே; மார்பிடைத்
திருவும் நோவுற -
(இராமன் தனது) திருமார்பில் (இடைவிடாது) உறைகின்ற
திருமகளும் வருந்தும்படி; நீண்ட பொன் தடக் கையால் - நீண்டு தொங்கும்
அழகிய பெரிய கைகளினால்; நெடிது புல்லினான் - அழுந்தத்
தழுவியவனாய்; மூண்டு எழு வெகுளி - (சுக்கிரீவன் மேல்) மூண்டெழுந்த
கோபமானது; போய் ஒளிப்ப - தணிந்துபோக; முன்புபோல் ஈண்டிய
கருணை தந்து -
முன்பு போலவே மிக்க அன்பு பாராட்டி; இருக்கை ஏவி -
(அந்தச் சுக்கிரீவனை) அமருமாறு பணித்து;

     இராமனது சினம் கருணையாக மாறியது; சுக்கிரீவனைக் காணும்
வரையில் அவன்பால் கொண்டிருந்த சினம் இராமனிடம் குடிகொண்டிருந்தது
இங்குக் குறிக்கத்தக்கது.  நெடிது புல்லுதல்: காடாலிங்கனமும உயிருறத்
தழுவுதலும் ஆகும்.                                             127