4398. | பின்னரும் விளம்புவான், 'பெருமையோய்! நின்று இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன்; மன்னவ! நின் பணி மறுத்து வைகி, என் புல் நிலைக் குரங்கு இயல் புதுக்கினேன்' என்றான். |
பின்னரும் - (சுக்கிரீவன் இராமனை நோக்கி) மறுபடியும்; விளம்புவான் - கூறுவான்; 'பெருமையோய் - பெருமைக் குணமுடைய வனே!மன்னவ - அரசனே!நினது இன் அருள் - உனது இனிய அருளால்; உதவிய செல்வம் எய்தினேன் - கிடைத்தற் கரிய செல்வத்தை அடைந்தேன்; நின் பணி மறுத்து வைகி - (அவ்வாறு பெற்றிருந்தும்) உனது கட்டளையை மீறி நடந்து; என் புல் நிலை - எனது அற்பமான; குரங்கு இயல் புதுக்கினேன் - குரங்குப் புத்தியைப் புதிதாக வெளிப் படுத்தி விட்டேன்; என்றான் - என்று கூறினான். உதவி செய்தவர் திறத்தில் செய்ந் நன்றி மறந்து பிழை செய்த தனது இழிகுணத்தைச் சுக்கிரீவன் வெறுத்துக் கூறுகின்றான் என்பது. 130 |