4399. | 'பெருந் திசை அனைத்தையும் பிசைந்து தேடினேன் தரும் தகை அமைந்தும், அத் தன்மை செய்திலேன்; திருந்திழை திறத்தினால், தெளிந்த சிந்தை நீ, வருந்தினை இருக்க, யான் வாழ்வின் வைகினேன். |
(பின்னும் இராமனை நோக்கிச் சுக்கிரீவன்); பெருந்திசை அனைத் தையும் - பெரிய திக்குகள் எல்லாவற்றையும்; பிசைந்து தேடினேன் - துருவித் தேடிப் பார்த்து; தரும் தகை - சீதையைக் கொண்டுதரக் கூடிய திறமை; அமைந்தும் - (என்னிடம்) இருந்தும்; அத் தன்மை செய்திலேன் - அவ்வாறு செய்யாதவனாய்; திருந்து இழை திறத்தினால் - வேலைப்பாடு மிக்க அணிகளை அணிந்தவளான சீதையின் பொருட்டு; தெளிந்த சிந்தை நீ- இயல்பாகவே கலக்கம் இல்லாமல் தெளிந்த மனமுடைய நீ; வருந்தினை இருக்க - வருந்தி இருக்கவும்; யான் - (அதைச் சிறிதும் எண்ணாமல்) நான்; வாழ்வில் வைகினேன் - இன்ப வாழ்க்கையில் காலங்கழித்தேன். கலங்காத இராமனது மனம் கலங்கியிருக்க அதைத் தெளிவிக்கும் வல்லமை தனக்கு இருந்தும் அதற்கேற்ற வழிமுறையும் தேடாது இன்ப வாழ்வில் பொழுது போக்கியிருந்த தன் பேதைமையைச் சுக்கிரீவன் வெறுத்துக் கூறுகின்றான் என்பது. திருந்திழை - சீதை: அன்மொழித் தொகை. 131 |