4405.விரும்பிய இராமனும், 'வீர!
      நிற்கு அது ஓர்
அரும் பொருள் ஆகுமோ?
      அமைதி நன்று' எனா,
'பெரும் பகல் இறந்தது;
      பெயர்தி; நின் படை
பொருந்துழி வா' என,
      தொழுது போயினான்.

     விரும்பிய இராமனும் - (சுக்கிரீவனிடம்) அன்புடைய இராமனும்;
(அவனை நோக்கி); வீர - வீரனே!நிற்கு அது - உனக்கு (ச் சேனை திரட்டி
முடித்தலாகிய) அச் செயலானது; ஓர் அரும்பொருள் ஆகுமோ - அரிய
காரியமாகுமோ? அமைதி நன்று - (உனது) அடக்கமான குணம் சிறந்ததாக
உள்ளது; எனா - என்று சொல்லி; பெரும்பகல் இறந்தது - (இப்பொழுது)
நீண்ட பகலோ கழிந்துவிட் டது; பெயர்தி - (ஆகவே இன்று புறப்பட்டுச்
சென்று; நின் படை - உனது சேனை; பொருந்துழி வா - திரண்டு வந்த
போது (அவற்றோடு) வருவாய்; என - என்று இராமன் விடை கொடுக்க;
தொழுது போயினான் -
இராமனை வணங்கி (ச் சுக்கிரீவன்) சென்றான்.

     சுக்கிரீவன் தன் சேனை தங்கியுள்ள பாசறைக்குச் சென்றான் என்பது.
பெயர்தி: முற்றெச்சம்.                                          137