4414. தனி வரும் தடங் கிரி
      எனப் பெரியவன், சலத்தால்
நினையும் நெஞ்சு இற
      உரும்என உறுக்குறு நிலையன்,
பனசன் என்பவன் -
      பன்னிரண்டு ஆயிர கோடிப்
புனித வெஞ் சின வானரப்
      படை கொடு - புகுந்தான்.

     தனிவரும் - தனித்து வருகின்ற; தடங்கிரி எனப் பெரியவன் -
பெரியமலை போன்ற பெருந் தோற்றத்தையுடையவனும்; சலத்தால் -
தணியாதகோபத்தால்; நினையும் நெஞ்சு இற - நினைப்பவர்களின் மனம்
உடையும்படி; உரும் என உறுக்குறு நிலையன் - இடி போல (க் கண்டவரை)
நடுங்கச் செய்கின்ற தன்மையுமான; பனசன் என்பவன் - பனசன் என்ற
வானரத் தளபதி; பன்னிரண்டு ஆயிர கோடி - பன்னிரண்டாயிரங் கோடி
என்று சொல்லக் கூடிய; புனிதம் வெம் சினம் - தூய கடுங் கோபமுடைய;
வானரம் படை கொடு -
வானர சேனையோடு; புகுந்தான் - வந்து
சேர்ந்தான்.

     ஒத்தாரோடன்றிப் போர் செய்யாத தன்மையால் சினத்துக்கு
வெம்மையுடன் புனிதமும் சேர்த்துக் கூறினார்.                         8