4425. தீர்க்கபாதனும், வினதனும்,
      சரபனும், - திரைக்கும்
மால் கருங் கடற்கு உயர்ந்தென
      மைம் முகத்து அனிகம்
ஆர்க்கும் எண்ண அருக் கோடி கொண்டு,
      அண்டமும் புறமும்
போர்க்கும் பூமியில் மறைதர, -
      முறையினின் புகுந்தார்.         *

     தீர்க்க பாதனும் - தீர்க்க பாதனும்; வினதனும் சரபனும் - வினதனும்
சரபனும்; திரைக்கும் மால் கருங் கடற்கு உயர்ந்து என - அலையெறிகின்ற
பெரிய கரிய கடலைக் காட்டிலும் பெருந் தோற்றத்தையுடையனவான;
ஆர்க்கும் எண்ண அரும் - எத் திறமுடையவர்க்கும்எண்ணிக்
கணக்கிடமுடியாத; மை முகத்து அனிகம் கோடி கொண்டு -
கறுத்த முகமுள்ள கோடிக் கணக்கான வானர சேனையை உடன் கொண்டு;
அண்டமும் புறமும் -
உலகவுருண்டையின் உள்ளும் புறமும்; போர்க்கும்
பூமியின் மறைதர -
மேலே எழுந்து மூடிக் கொள்ளும் புழுதியால்
மறையும்படி; முறையினில் புகுந்தார் - ஒருவர்பின் ஒருவராக வந்து
சேர்ந்தார்கள்.

     தீர்க்கபாதன்: நீண்ட காதலுடையவன். விநதன்: மிகவும்
வணக்கமுடையவன். சரபன்: சரபப் பறவை (எட்டுக்கால் புள்) போன்ற வலிமை
வாய்ந்தவன்; இவன் மேகக் கடவுளின் மைந்தன். மைம் முகத்து அனிகம்:
கருங்குரங்குகளின் படை.                                        19