வானர சேனைகளின் ஆற்றலும் சிறப்பும்

4429.தோயின், ஆழி ஓர் ஏழும் நீர்
      சுவறி வெண் துகள் ஆம்;
சாயின், அண்டமும் மேருவும்
      ஒருங்குடன் சாயும்;
ஏயின், மண்டலமும் எள் இட
      இடம் இன்றி இரியும்;
காயின் வெங் கனல்-
      கடவுளும் இரவியும் கரியும்.

     தோயின் - (அங்கே திரண்ட வானர சேனைகள்) படிந்து முழுகினால்;
ஆழி ஓர் ஏழும் -
ஏழு கடல்களும்; நீர் சுவறி வெண்துகள் ஆம் - நீர்
வற்றி வெள்ளை நிறப் புழுதியாக மாறி விடும்; சாயின் - ஒரு பக்கமாகச்
சாய்ந்தால்; அண்டமும் மேருவும் - பூமி மண்டலமும் மேரு மலையும்;
ஒருங்கு உடன் சாயும் -
ஒரு சேர உடனே (அந்தப் பக்கமாகச்) சாய்ந்து
விடும்; ஏயின் - எழுந்து உலாவினால்; மண்தலம் - இந்தப் பூமி; எள் இட
இடமின்றி இரியும் -
எள் இடுவதற்கும் இடம் இல்லாமற்போகும்; காயின் -
சினம் கொள்ளுமாயின்; வெங்கனல் கடவுளும் - கொடிய அக்கினிதேவனும்;
இரவியும் -
சூரியனும்; கரியும் - வெந்து கருகிவிடும்.

     இச் செய்யுள் வானர சேனையின் மிகுதியையும், பெரு வலிமையையும்
குறிக்கிறது.  இச் செய்யுள் அடிமறிமாற்றுப் பொருள்கோள் அமைப்புடையது.
எந்த அடியை எங்கே கூட்டினும் பொருளும் ஓசையும் வேறுபடா.

     ஏயின் - எழுந்துஉலாவினால்.                               23