இராமன் படைகளைக் காணுதல் 4434. | அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும், அருக்கன் தனையன், நொய்தினின் தயரதன் புதல்வனைச் சார்ந்தான்; 'நினையும் முன்னம் வந்து அடைந்தது, நின் பெருஞ் சேனை; வினையின் கூற்றுவ, கண்டருள், நீ என விளம்ப. |
அனையது ஆகிய சேனை - அப்படிப்பட்ட வானரப் படை; வந்து இறுத்தலும் - வந்து தங்கிய அளவில்; அருக்கன் தனயன் - சூரியன் மகனான சுக்கிரீவன்; தயரதன் புதல்வனை நொய்தினில் சார்ந்தான் - தசரத மன்னனின் மகனாகிய இராமனை விரைவில் சென்றடைந்து; வினையின் கூற்றுவ - தீவினைகளுக்கு இயமன் போன்றவனே!நினையும் முன்னம் - நினைப்பதற்க முன்பே (வெகு விரைவில்); நின் பெருஞ் சேனை - உனது பெரிய சேனையானது; வந்து அடைந்தது - வந்து சேர்ந்தது; கண்டருள் நீ - நீ அதைக் காண வருவாய்; என விளம்ப - எனக் கூற. . . . 'வினையின் கூற்றுவ' என்று இராமனை விளித்தது உயிர்களை வாட்டும் வினைகளைப் போக்கிஅவற்றைப் பிறப்பற்றனவாகச் செய்யும் இராமனது அருள் திறம்கருதி. 28 |