4445.'தரங்க நீர் எழு
      தாமரை நான்முகன் தந்த
வரம் கொள் பேர்
      உலகத்தினில், மற்றை மன்னுயிர்கள்,
உரம் கொள் மால் வரை
      உயிர் படைத்து எழுந்தன ஒக்கும்
குரங்கின் மாப் படைக்கு,
      உறையிடப் படைத்தனன்கொல்லாம்?

     தரங்க நீர் எழு - அலைகள வீசும் நீரில் முளைக்கும் இயல்புள்ள;
தாமரை நான்முகன் -
தாமரை மலரின் உதித்த பிரமன்; தந்த -
படைத்த; வரம் கொள் - மேன்மையைப் பெற்ற; பேர் உலகத்தினில்- இப்
பெரிய உலகத்திலுள்ள; மற்றை மன் உயிர்கள் - நிலை பெற்ற மற்றைய
உயிரினங்களை; உயிர் படைத்து எழுந்தன - உயிர் பெற்று வந்தனவாகிய;
உரம் கொள் -
வலிமை கொண்ட; மால் வரை ஒக்கும் .பெரிய
மலைகளைப் போன்ற; குரங்கின் மா படைக்கு - இந்தப் பெரிய வானர
சேனைக்கு; உறை இட - உறையிட்டுக் கணக்கிடுவதற்காகவே; படைத்தனன்
கொல் -
படைத்தான் போலும்.

     பிற உயிர்களெல்லாம் இச் சேனையிலுள்ள வானரத் தொகைக்கு
உறையிடு வதற்கென்றே படைக்கப்பட்டனபோலும் என்பது.

     உறை: பெரிய எண்ணைக் குறிப்பிட அடையாளமாக வைக்கும் சிறு
பொருள்.

     'அலருளோன் ஆதியாக ஒழிந்த வேறு உயிர்களெல்லாம் அரக்கருக்கு
உறையும் போதா' (4868) 'உறையிடவும் போதார்' - (5344) என்ற இடங்களிலும்
இக்கருத்து வந்துளது.                                             39