நடக்க வேண்டுவன குறித்துச் சிந்தனை செய்க என இராமன் கூறுதல்

4450. எனது உரைத்த
      எரிகதிர் மைந்தனை,
வென்றி விற் கை
      இராமன் விருப்பினால்,
'நின்று இனிப் பல
      பேசி என்னோ? நெறி
சென்று இழைப்பன சிந்தனை
      செய்க' என்றான்.

     என்று உரைத்த - என்று கூறிய; எரி கதிர் மைந்தனை - வெப்ப
மான கதிர்களையுடைய சூரியன் மகனான சுக்கிரீவனை; வென்றி விற்கை
இராமன் -
வெற்றியைத் தரும் கோதண்டம் என்னும் வில்லைத் தாங்கிய
இராமன்; விருப்பினால் - அன்புடன் (நோக்கி); இனி நின்று பல பேசி
என்னோ -
இப்பொழுது (வீணே காலங் கழியுமாறு) பலபடப் பேசுவதால்
வரும் பயன் யாது? நெறி சென்று இழைப்பன - முறையாகச் செயலாற்றும்
வழியை மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றைக் குறித்து; சிந்தனை செய்க -
ஆலோசைை செய்க; என்றான் - என்று சொன்னான்.

     வென்றி விற்கை இராமன்: எப்பொழுதும வெற்றியே அல்லாமல்
தோல்வியையறியாத கோதண்டத்தை ஏந்தியவன்.  எரிகதிர் - வினைத்
தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.  சூரியனைக் குறித்து
நின்றது.                                                       4