4453.'தென் திசைக்கண்,
      இராவணன் சேண் நகர்
என்று இசைக்கின்றது, என்
      அறிவு, இன்னணம்;
வன் திசைக்கு, இனி,
      மாருதி நீ அலால்,
வென்று, இசைக்கு உரியார்
      பிறர் வேண்டுமோ?

     இராவணன் சேண் நகர் - இராவணனுடைய நீண்ட பெரிய இலங்காபுரி;
தென்திசைக்கண் -
தெற்குத் திசையில் (உள்ளது); என்று - என்று; என்
அறிவு இன்னணம் இசைக்கின்றது -
எனது நினைவு இவ்வாறு
உணர்த்துகின்றது; மாருதி - அனுமானே!இனி வன திசைக்கு -
இப்போது வலிய அந்தத் திசைக்குச் (சென்று); வென்று - அங்குள்ள
அரக்கரை வெற்றி கொண்டு; இசைக்கு உரியார் - புகழ் பெறத்
தகுதியுள்ளவர்; நீ அலால் பிறர் வேண்டுமோ - நீ ஒருவனே யல்லாமல்
வேறொருவரும் வேண்டுமோ?

     'இராவணன் நகராகிய இலங்கை தென் திசையிலிருப்பதாக எனக்கு
நினைவு; நீ ஒருவனே அத் தென்திசைக்குச் சென்று இராவணனது
இலங்கையைக் கண்டு அங்குள்ள அரக்கரை வென்று சீதையின் செய்தியை
அறிந்து வந்து சொல்லிப் புகழ் பெறுவதற்குத் தகுதியுடையாய்' என்று
சுக்கிரீவன் அனுமனிடம் கூறினான்.

     இன்னணம் - (இன்னவண்ணம்) தொகுத்தல் விகாரம்.
எல்லாவுயிர்களையும் கவரும் யமன் திசையானதாலும், வீரம் மிக்க இராவணன்
அங்கு ஆட்சி புரிவதாலும் தென்திசை வன்திசைஎனப்பட்டது.          7