4461.'நொய்தின், அம் மலை நீங்கி, நுமரொடும்
பொய்கையின் கரை பிற்படப் போதிரால்;
செய்ய பெண்ணை, கரிய பெண்ணைச் சில
வைகல் தேடி, கடிது வழிக்கொள்வீர்.

     நொய்தின் - விரைவாக; அம்மலை நீங்கி - அந்த ஏமகூட மலையை
விட்டு அகன்று; நுமரொடும் - உங்களைச் சேர்ந்த வானரர் களுடனே;
பொய்கையின் கரை -
(அங்குள்ள) தடாகத்தின் கரையானது; பிற்படப்
போதிர் -
பின்னாகும்படி (அதை விட்டு) அப்பாலே செல்லுங்கள்; செய்ய
பெண்ணை -
(மகளிர்க்குரிய) நற் பண்புகளைக் கொண்ட சீதையை; கரிய
பெண்ணை -
கரிய பெண்ணை நதியின் இடங்களில்; சில வைகல் தேடி -
சில நாட்கள் தேடிப் பார்த்து; கடிது வழிக்கொள்வீர் - விரைந்து மேலே
செல்லுங்கள்.

     செய்ய பெண்ணை கரிய பெண்ணை - முரண் தொடை. வைகல் -
கழியும் தன்மையுடையது: காரணப்பெயர். நொய்து, கடிது: விரைவுபற்றி வந்த
வினையுரிகள்.                                                15