4464.'ஞாலம் நுங்குறு நல் அறத்தோர் பொருள்
போல நின்று பொலிவது, பூம் பொழில்;
சீல மங்கையர் வாய் எனத் தீம் கனி
காலம் இன்றிக் கனிவது காண்டிரால்.

     பூம்பொழில் - மலர்கள் நிறைந்த (முண்டகத்துறை என்னும்) அச்
சோலையானது; ஞாலம் நுங்குறும் - உலகத்தவரால் அனுபவிக்கப் படுகிற;
நல் அறத்தோர் பொருள் போல -
சிறந்த தரும சிந்தையுள்ள வர்களின்
செல்வம் போல; நின்று பொலிவது - நிலைபெற்று விளங்குவது; சீல
மங்கையர் வாய் என -
நல்லொழுக்கமுடைய மாதர்களின் வாயிதழ் போன்று;
தீம் கனி -
இனிய பழங்கள்; காலம் இன்றிக் கனிவது - (இன்ன காலமென்று
இல்லாது) எந்தக் காலத்திலும் பழுக்கப் பெறுவது; காண்டிர் - (அதனைச்)
சென்று காணுங்கள்.

     இம் முண்டகத்துறைக் கண்ணுள்ள மரங்களெல்லாம் சிறந்த பயன்மரங்கள்
என்பதும், எந்தக்காலத்தும் மாறாது இனிய கனி தருவன என்பதும் குறிக்கப்
பெற்றன.

     ஞாலம் - இடவாகுபெயர்.  சிறந்த அறச் சிந்தனையுள்ளவர்களின்
செல்வம் பெருகி உலகத்துள்ளார்க்கும் பயன்படும்.  கனிபோன்ற வாய்
என்னாமல் மகளிர் வாய் போன்ற கனி என்றது எதிர்நிலையணி.          18