4465.'நயனம் நன்கு இமையார்; துயிலார் நனி;
அயனம் இல்லை அருக்கனுக்கு அவ் வழி;
சயன மாதர் கலவித்தலைத் தரும்
பயனும், இன்பமும், நீரும், பயக்குமால்.  *

     (அங்குள்ளவர்கள்) நயனம் நன்கு இமையார் - கண்களை நன்றாக
இமைக்கமாட்டார்கள்; நனி துயிலார் - நன்றாகத் தூங்கமாட்டார்கள்;
அருக்கனுக்கு -
சூரியனுக்கு; அவ் வழி அயனம் இல்லை - அவ்விடத் தில்
நுழைவதற்குரிய வழி கிடையாது; சயனமாதர் கலவித் தலைதரும் பயனும் -
படுக்கையில் மகளிரின் சேர்க்கையால் உண்டாகின்ற போக இன்பத்தையும்;
இன்பமும் -
பெருமகிழ்ச்சியையும்; நீரும் - நீர்ச் செழிப்பையும், பயக்கும் -
(எப்பொழுதும்) உண்டாக்கும்.

     ஆல்: அசை. கண்ணிமையாமையும், துயிலாமையும் தேவர்களுக்கு
இயல்பு.  தேவர்கள் வாழுமிடமாயுள்ளது அப்பொழில்.  அது சூரியனின்
கதிர்களும் உட்புகாதவாறு மரங்களால் செறிந்துள்ளது.                 19