4474. | 'சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும், சுருதித் தொல் நூல் மாதவத்தோர் உறை இடமும், மழை உறங்கும் மணித் தடமும், வான மாதர் கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடுதொறும் கிளக்கும் ஓதை போதகத்தின் மழக் கன்றும் புலிப் பறழும் உறங்கு இடனும், பொருந்திற்று அம்மா! |
சூது அகற்றும் - வஞ்சனையை ஒழித்து நிற்கும்; திருமறையோர் - மனச் செம்மையுடைய அந்தணர்கள்; ஆடும் துறை - நீராடுகின்ற படித்துறைகள்; நிறை ஆறும் - நிறைந்துள்ள நதிகளையும்; சுருதித் தொல் நூல் - வேதங்களாகிய பழமையான சாத்திரங்களையும் நன்றாக அறிந்த; மா தவத்தோர் - பெருந்தவ முனிவர்கள்; உறை இடமும் - வசிக்கின்ற ஆசிரமங்களையும்; மழை உறங்கும் மணித் தடனும் - மேகங்கள்படிகின்ற இரத்தினங்களைக் கொண்ட இடங்களையும்; வான மாதர் - தேவ மாதரின்; கீதம் ஒத்த - இசைப் பாட்டுக்கு நேரான; கின்னரங்கள் - கின்னரம் என்னும் இசைக் கருவிகளினுடைய; இன் நரம்பு - இனிய நரம்புகளை; வருடு தொறும்- தடவும் பொழுதெல்லாம்; கிளக்கும் ஓதை - எழுகின்ற ஓசையால்; போதகத்தின் மழக்கன்றும் - யானைகளின் இளங்கன்றுகளும்; புலிப் பறழும்- புலிக் குட்டிகளும்; உறங்கு இடனும் - (தம்முள் பகையின்றி) ஒருங்கே தூங்ககின்ற இடங்களையும்; பொருந்திற்று - பொருந்தியுள்ளது (அத்திருவேங்கட மலை) அம்மா - வியப்பிடைச் சொல். அந்த மலையில் தேவ கன்னியர் வந்து கின்னர வாத்தியங்களை இசைக்கின்றார்கள்; அவற்றிலிருந்து எழும் இன்னிசையைக் கேட்டுத் தம்முள் பகை கொள்ளும் இயல்புடைய யானைக் கன்றுகளும் புலிக் குட்டிகளும் பகைமை நீங்கி ஓரிடத்திலே தங்குமென்பது. அந்த மலைச்சிகரங்கள் மேக மண்டலம் வரையில் உயர்ந்துள்ளனவாதலின் 'மழையுறங்கு மணித்தடன்' என்றார். கின்னரம் - ஒருவகை நரம்புக்கருவி; ஒரு வகையாழ். போதகம் - யானைக் கன்று. பகைமையையும் மாற்றவல்ல இசையின் பெருமை கூறப் பெற்றது. 28 |