4476. | 'துறக்கம் உற்றார் மனம் என்ன, துறை கெழு நீர்ச் சோணாடு கடந்தால், தொல்லை மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர்; அவ் வழி நீர் வல்லை ஏகி, உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி, மணியால் ஓங்கல் பிறக்கம் உற்ற மலை நாடு நாடி, அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ. |
துறக்கம் உற்றார் மனம் என்ன - சொர்க்கத்தையடைந்தவர்களின் மனம் போல; துறை கெழு நீர்ச் சோணாடு கடந்தால் - (தெளிவாகத்) துறைகளிலே விளங்குகின்ற நீரையுடைய (காவிரியைக் கொண்டுள்ள) சோழ நாட்டைத் தாண்டிச் சென்றால்; அதன் அயலே - அந்த நாட்டின் அருகிலே; தொல்லை மறக்கம் உற்றார் - பழவினைத் துன்பங்களை முற்றும் மறந்த முனிவர்கள் (வினைத் தொல்லைகள் அற்றவர்); மறைந்து உறைவர் - மறைந்து வாழ்வார்கள்; நீர் அவ்வழி வல்லை ஏகி - நீங்கள் அந்த வழியிலே விரைவாகச் சென்று; உறக்கம் உற்றார் கனவு உற்றார் - தூங்கியவர் கனவு வாழ்வையடைந்தவராவர் (ஒரு பயனையும் அடையமாட்டார்கள்); எனும் உணர்வினொடும் ஒதுங்கி - என்ற அறிவோடு சற்று விலக்கிச் சென்று; மணியால் ஓங்கல் பிறக்கம் உற்ற - இரத்தினங்களின் ஒளியால் மலைகள் விளக்கமுற்றுள்ள; மலைநாடு நாடி - மலை நாட்டில் சீதையைத் தேடி; அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் - (பிறகு) பரந்துள்ள செந்தமிழ் நாடான பாண்டிய நாட்டிற்குச் சென்று சேருங்கள். மாது, ஓ: ஈற்றசைகள். சொர்க்கம் அடைந்தவர் துயரத்தால் கலங்காமல் எப்பொழுதும் இன்பத்தால் நிறைந்த மனத்தையுடையவராதல் போலக் காவிரியாறும் நீர்நிரம்பிய துறைகளைப் பெற்றிருக்கும் என்பது. தென்திசை நோக்கிச் சோழநாடு கடந்ததும் பாண்டிய நாட்டிற்குள் உடனே புகுந்து விடாமல் சோழநாட்டின் மேற்கப் பகுதியிலுள்ள மலைநாட்டிலும் தேடவேண்டுமென்ற கருத்தொடு ஒதுங்கி மலைநாட்டில் நாடிப் பிறகு பாண்டிய நாட்டிற் சேருமாறு சுக்கிரீவன் வானர வீரர்களுக்குக் கட் டளையிட்டான் என்பது. துறக்கமுற்றார் மனம் - நீர்த் தெளிவிற்கு உவமை. ஒப்பு: 'காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல மாசறு விசும்பின்' - (சீவக சிந். 851) சோணாடு: சோழநாடு என்பதன் மரூஉ. மறக்கம்: தொழிற் பெயர் (மறத்தல்) மலைநாடு: சேரநாடு. 30 |