இராமன் அனுமனுக்குச் சீதையின் அங்க அடையாளங்கள் கூறுதல்

ஆசிரிய விருத்தம்

4479.'பாற்கடல் பிறந்த செய்ய
      பவளத்தை, பஞ்சி ஊட்டி,
மேற்பட மதியம் சூட்டி,
      விரகுற நிரைத்த மெய்ய
கால் தகை விரல்கள் -
      ஐய! - கமலமும் பிறவும் எல்லாம்
ஏற்பில என்பது அன்றி, இணை
      அடிக்கு உவமை என்னோ?

     ஐய - (இராமன் அனுமனைப் பார்த்து) ஐயனே; மெய்ய கால் தகை
விரல்கள் -
(சீதையின்) செம்மையான கால்களிலுள்ள அழகிய விரல்கள்;
பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தை -
பாற்கடலில் உண்டான சிவந்த
பவளத் துண்டுகளை; பஞ்சி ஊட்டி - செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து;
மேற்பட மதியம் சூட்டி -
அவற்றின் மேற்புறத்தில் சந்திரர்களைப் பொருந்தச்
செய்து; விரகுற  நிரைத்த மெய்ய - திறம்பட ஒழுங்காக அமைக்கப்பட்ட
வடிவு கொண்டவை; கமலமும் பிறவும் எல்லாம் - (உலகில் பாதங்களுக்கு
உவமை கூறப்படும்) தாமரை மலரும் பிற பொருள்களும் ஆகிய எல்லாம்;
ஏற்பில -
(சீதையின் பாதங்களுக்கு) உவமையாக மாட்டா; என்பது அன்றி -
என்று சொல்லலாமே யல்லாமல்; இணை அடிக்கு உவமை என்னோ-
(அவளுடைய) இரண்டு பாதங்களுக்கு ஏற்ற உவமைப் பொருள்யாதோ?
(எதுவுமில்லை)

     நகங்களோடு கூடி இயற்கைச் செந்நிறம் அமைந்த சீதையின்
கால்விரல்களுக்குச் செம்பஞ்சு ஊட்டிச் சந்திரர்களையணிவித்த தெய்வத்
தன்மையுள்ள பவளத் துண்டுகள் ஒப்பாகும் என்பது.  தன்மைத்
தற்குறிப்பேற்றவணி.  பாதங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பூட்டுதல் மென்மை
உண்டாவதற்கும், நிறமுண்டாவதற்கும் ஆகும்.

     விரல்களையுடைய பாதங்களுக்கு இதழ்களையுடைய கமலம்
உவமையாயிற்று: மென்மையும் செந்நிறமும் பற்றி. நகங்களுக்கு வெண்மையான
சந்திரர்கள் உவமை.  சீதை திருமகளின் திருவவதாரமாதலால்
பாதாதிகேசாந்தமாக வருணிக்கத் தொடங்கும் குறிப்பையுணரலாம்.  இதன்முன்
4467 முதல் வந்தனவும் அறுசீர் விருத்தங்களே; இதுமுதல் 4519 முடிய
வருவனவும் அறுசீர் விருத்தங்களே.  சீரமைப்பால் முன்னவை ஒருவகை;
பின்னரே வேறுவகை.                                          33