4480.'நீர்மையால் உணர்தி - ஐய! -
      நிரை வளை மகளிர்க்கு எல்லாம்
வாய்மையால் உவமை ஆக,
      மதி அறி புலவர் வைத்த
ஆமை ஆம் என்ற போதும்,
      அல்லன சொல்லினாலும்,
யாம யாழ் மழலையாள்தன்
      புறவடிக்கு இழுக்கம் மன்னோ.

     ஐய - ஐயனே!நிரை வளை மகளிர்க்கு எல்லாம் - வரிசையாக
அணிந்த வளையல்களையுடைய பெண்களின்புறவடிகளுக் கெல்லாம்; உவமை
ஆக -
உவமானமாகுமாறு; மதி அறி புலவர் வாய்மையால் வைத்த - தமது
நுண்ணறிவால் எல்லாவற்றையும்உணரவல்ல புல வர்கள் உறுதியாக அமைத்த;
ஆமை ஆம் என்ற போதும் -
ஆமையென்று சொன்னாலும்; அல்லன
சொல்லினாலும் -
அதுவல்லாத சுவடி முதலியவற்றைக் கூறினாலும்; யாம
யாழ் மழலையாள்தன் -
நள்ளிரவில் மீட்டப்படும் குறிஞ்சி யாழ் போன்ற
மழலைச் சொற்களையுடைய சீதையின்; புற அடிக்கு - புறவடிக்கு
(உவமையாகச் சொல்வது); இழுக்கம் - குறைவேயாகும்; நீர்மையால்
உணர்தி-
(இத் தன்மையை) நீ உன் தெளிந்த அறிவால் அறிவாய்.

     மன், ஓ: ஈற்றசைகள்.

     யாமயாழ் என்றது குறிஞ்சி யாழை. நள்ளிரவில் மீட்டப்படுவதாகலின்
அப்பெயர் பெற்றது.  'யாமயாழ்ப் பெயர்க் குறிஞ்சி யாழும்' என்பது சேந்தன்
திவாகரம்.  மகளிர் புறவடிகளுக்கு உவமையாக ஆமை சுவடி முதலியவற்றைக்
கூறுவர்.  அத்தகைய பொருள்களும் தெய்வத் தன்மையுள்ள சீதையின்
புறவடிகளுக்கு ஒப்பாகா என விலக்குவது இச்செய்யுல். எதிர்நிலையணி.

     புறவடி- அடியினது புறம்: முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்
தொகை.                                                       34