4494.'அங்கையும் அடியும் கண்டால்,
      அரவிந்தம் நினையுமாபோல்
செங் களி சிதறி, நீலம்
      செருக்கிய தெய்வ வாட் கண்
மங்கைதன் கழுத்தை நோக்கின், வளர்
      இளங் கழுகும், வாரிச்
சங்கமும், நினைதிஆயின், அவை
      என்று துணிதி; தக்கோய்!

     தக்கோய் - சிறப்பு வாய்ந்தவனே!அங்கையும் அடியும் கண்டால் -
(சீதையின்) அழகிய கைகளையும், பாதங்களையும் பார்த்தால்; அரவிந்தம்
நினையுமா போல் -
செந்தாமரைப் பூவை நினைப்பது போன்று; செங் களி
சிதறி -
செம்மையான செவ்வரி படர்ந்து; நீலம் செருக்கிய - நீல நிறம்
நிறைந்த; தெய்வ வாள் கண் மங்கைதன் - தெய்வத் தன்மையுள்ள
வாள்போன்ற கண்களையுடைய சீதையின்; கழுத்தை நோக்கின் - கழுத்தைப்
பார்த்து; வளர் இளங் கமுகும் - வளருந் தன்மையுள்ள பாக்குமரத்தையும்;
வாரி சங்கமும் -
கடலில் பிறக்கும் சங்கையும்; நினைதி ஆயின் - (அவள்
கழுத்துக்கு இணையாகும் என்று) எண்ணுவாயானால்; அவை என்று
துணிதி-
(அந்தக் கமுகும், சங்குமே அச்சீதையின் கழுத்திற்கு)
உவமையாகும் என்றுஉறுதி செய்வாய்.

     செந்தாமரை - கைகளுக்கும், கால்களுக்கும் உவமைகள்; கமுகும் சங்கும்
கழுத்துக்கு உவமை. திரட்சியிலும், வழுவழுப்பிலும் கழுத்துக்குக் கமுகு
உவமை.  குவளைமலர் நிறத்திலும், வாள் வடிவத்திலும், ஒளி செய்வதிலும்
கூர்மையிலும், ஆடவரை வருத்துவதிலும் கண்களுக்குஉவமை.          48