4495.'பவளமும், கிடையும், கொவ்வைப்பழனும்,
      பைங் குமுதப்போதும்,
துவள்வுஇல இலவம், கோபம், முருக்கு
      என்று இத் தொடக்கம், ''சாலத்
தவளம்'' என்று உரைக்கும்வண்ணம்
      சிவந்து, தேன் ததும்பும்ஆயின்,
குவளை உண் கண்ணி வண்ண
      வாய் அது; குறியும் அஃதே.

     குவளை உண் கண்ணி - கருங்குவளை போன்ற மைதீட்டப்பட்ட
கண்களையுடைய சீதையின்; வண்ண வாய் அது - அழகிய வாயானது;
பவளமும் கிடையும் -
பவளமும் சிவந்த நெட்டியும்; கொவ்வைப் பழனும் -
கொவ்வைக்கனியும்; பைங் குமுதப்போதும் - புதிய செவ்வல்லி மலரும்;
துவள்வு இல இலவம் -
துவண்டுபோகாத இலவமரத்தின் மலரும்; கோபம் -
இந்திரக்கோபப் பூச்சியும்; முருக்கு - கல்யாண முருங்கை மலரும்; என்ற இத்
தொடக்கம் -
என்று கூறும் இவை முதலான உவமப் பொருள்கள்; சாலத்
தவளம் என்று உரைக்கும் வண்ணம் -
மிகவும் வெண்ணிறமானவை என்று
சொல்லுமாறு; சிவந்து - மிகுதியாகச் செந்நிறம் பெற்று; தேன் ததும்பும் -
தேன் நிரம்பியிருக்கும்; ஆயின் - என்றால்; குறியும் அஃது  -அதற்கு
உவமையாகக் கூறத்தக்க பொருளும் அதுவேயாகும்.

     சீதையின்வாய் பவளம் முதலியவற்றினும் மிகச்சிவந்து தேன்
ததும்புவதால், அப் பவளம் முதலியவை சீதையின் வாய்க்கு
உவமையாகமாட்டா; அதற்கு அதுவே உவமையாகுமல்லாது வேறு
உவமையில்லை என்பது.  எதிர்நிலையணியி அங்கமாகக் கொண்டுவந்த
இயைபின்மையணி. தேன்: இனிமைக்கு இலக்கணை.  இலவ மலர்களின்
இதழ்கள் தடித்திருக்குமாதலால் 'துவள்வு இல இலவம்' என்றார்.         49