4497.'முல்லையும் முருந்தும், முத்தும்,
      முறுவல் என்று உரைத்தபோது,
சொல்லையும், அமிழ்தும், பாலும், தேனும்
      என்று உரைக்கத் தோன்றும்;
அல்லது ஒன்று ஆவது இல்லை;
      அமிர்திற்கும் உவமை உண்டோ?
வல்லையேல், அறிந்துகோடி, மாறு இலா
      ஆறு - சான்றோய்!

     சான்றோய் - சால்புக் குணம் மிகுந்தவனே!முறுவல் - (சீதையின்)
பற்கள்; முல்லையும் - முல்லையரும்புகளையும்; முருந்தும் - மயிலிறகின்
அடியையும்; முத்தும் - முத்துக்களையும் (ஒப்பனவாம்); என்று
உரைத்தபோது -
என்று சொன்ன காலத்தில்; சொல்லையும் - அவள்
சொற்களைக் குறித்தும்; அமிழ்தும் - தேவரமிழ்தையும்; பாலும் - பாலையும்
தேனும் - தேனையும்; (போலும்); என்று உரைக்கத் தோன்றும் - என்ற
உரைக்க (மனத்தில்) எண்ணம் உண்டாகும்; அல்லது - (இவ்வாறு இவற்றிற்கு
இவற்றை உவமையாகக் கூறவேண்டும் என்ற முறை) அல்லாமல்; ஆவது
ஒன்றும் இல்லை -
(அவள் பற்களுக்கு) உவமையாகும் பொருள் ஒன்றும்
இல்லை; அமிர்திற்கும் உவமை உண்டோ - தேவாமிர்தத்திற்கும்
உவமையாகக் கூறும் (சிறப்புப் பொருள்) உண்டோ?வல்லையேல் - உனக்கு
வல்லமை இருந்தால்; மாறு இலா ஆறு - வேறு உவமை இல்லாத
தன்மையை; அறிந்து கோடி - (சீதையின் பற்கள் இத் தன்மையன என்று
ஊகித்து) அறிந்து கொள்வாய்.

     அமிழ்தம் முதலியன சொற்களுக்கு உவமையாகாதவாறு போல முல்லை
முதலியனவும் பற்களுக்கு உவமையாகா என்பது.  மேலும், சீதையின்
பற்களுக்கு உவமையாவதற்குப் பொருந்தாத முல்லையரும்பு முதலியவற்றை
உவமையாகுமென்றால் அவ்வாறே, அவள் சொற்களுக்க உவமையாகாத
தேவாமிர்தம் முதலிய பொருள்களையும் அச் சொற்களுக்கு உவமம்
கூறவேண்டிவரும்; உண்மையாகப் பார்த்தால் ஒரு பொருளும் அவற்றிற்கு
உவமம் ஆகாது; அமிழ்தம் தான் உவமானமாக அமைவதல்லாமல்
உபமேயமாக நின்று தனக்கு வேறு ஓர் உவமையைப் பெறாதவாறு போலச்
சீதையின் பற்களும் தாம் உவமானமாக நிற்பதல்லாமல் தமக்கு வேறு ஓர்
உவமையைப் பெற என்பது.  பிறிது மொழிதலணி.

     உவமைப் பொருள் உயர்ந்ததாய் அமைய வேண்டியிருத்தலால் சீதையின்
பற்களுக்க உவமை கூறத்தக்க பெருமைவாய்ந்த பொருள் ஒன்றுமில்லை
என்றான்.                                                       51