4500.'பெரிய ஆய், பரவை ஒவ்வா;
      பிறிது ஒன்று நினைந்து பேச
உரிய ஆய், ஒருவர் உள்ளத்து
      ஒடுங்குவ அல்ல; உண்மை
தெரிய, ஆயிரக் கால் நோக்கின்,
      தேவர்க்கும் தேவன் என்னக்
கரிய ஆய், வெளிய ஆகும்,
      வாள் தடங் கண்கள் அம்மா!

     தேவர்க்கும் தேவன் என்ன - தேவர்களுக்கெல்லாம் தேவனான
திருமாலைப் போன்று; கரிய ஆய் - கருமையாகியும்; வெளிய ஆகும் -
வெண்மையாகியுமுள்ள; வாள் தடங் கண்கள் - ஒளி பொருந்திய பெரிய
கண்கள்; உண்மை தெரிய - (அவற்றின்) உண்மையான தன்மை
தெரியும் படி; ஆயிரங் கால் நோக்கின் - ஆயிரந் தடவை பார்த்தாலும்;
பெரிய ஆய், பரவை ஒவ்வா -
மிகவும் அகன்றதாய்க் கடலையும்
உவமையாக ஏற்காவாம் (கடலினு பெரியன); பிறிது ஒன்று நினைந்து பேச -
வேறு ஓர் உவமானப் பொருளை ஆராய்ந்து கூறுவதற்கு; உரிய ஆய் -
தகுந்தனவாகி; ஒருவர் உள்ளத்து - ஒருவரது மனத்திற்குள்; ஒடுங்குவ
அல்ல -
அடங்கும் இயல்புடையன அல்ல. (அம்மா- வியப்பிடைச் சொல்)

     சீதையின் கண்கள் மிகப் பெரியனவாயிருத்தலால் அவற்றின் தன்மையை
உள்ளத்தினால் ஊன்றியுணர்வதற்கு ஒருவராலும் இயலாது என்பது.  சீதையின்
கருவிழிகள் திருமால் போலக் கறுத்தும், அக கருவிழிகளைச் சுற்றிலுமுள்ள
பகுதிகள் அத்திருமால் பள்ளி கொள்ளும் பாற்கடல்போல வெளுத்தும்
இருக்கும் என்பது.  கரியவாய் வெளியவாகும்: தொடைமுரண்.           54