4506. | 'புல்லிதழ் கமலத் தெய்வப் பூவிற்கும் உண்டு; பொற்பின் எல்லையின் மதிக்கும் உண்டாம், களங்கம் என்று உரைக்கும் ஏதம்; அல்லவும் சிறிது குற்றம் அகன்றில; அன்னம் அன்ன நல் இயலாளுக்கு, எல்லாம் நலன் அன்றி, பிறிது உண்டாகுமோ? * |
தெய்வக் கமலப் பூவிற்கும் - தெய்வத் தன்மையுள்ள தாமரைப் பூவிற்கும்; புல்லிதழ் உண்டு - பயனற்றதான (அதனை மேலே தழுவியுள்ள) புறவிதழாகிய குற்றமுண்டு; பொற்பின் எல்லையின் மதிக்கும் - அழகின் வரம்பாகிய சந்திரனுக்கும்; களங்கம் என்று உரைக்கும் ஏதம் - களங்கமென்று சொல்லுகின்ற குற்றம்; உண்டாம் - உள்ளதாகும்; அல்லவும் - இவை அல்லாமல் மற்றுமுள்ள சிறந்த பொருள்களும்; சிறிது குற்றம் அகன்றில - சிறிதளவாவது குற்றம் இல்லாமல் இருக்கமாட்டா (ஒவ்வொரு பொருளுக்கும் ஓரளவாவது குற்றம் உண்டு); அன்னம் அன்ன நல் இயலாளுக்கு - அன்னப் பறவை போன்ற அழகிய நடையையுடையவளாகிய சீதைக்கு; எல்லாம் நலன் அன்றி - முழுவதும் நன்மையேயல்லாமல்; பிறிது உண்டாமோ - வேறொன்றாகிய குற்றம் உண்டோ? (இல்லை என்றவாறு). ஆல் - தேற்றம். தாமரைமலர்க்கும் புறவிதழாகிய குற்றமுள்ள; சந்திரனுக்கும் களங்கமாகிய குற்றம் இருக்கின்றது; இவ்வாறு. பல சிறப்பான குணங்களையுடைய உயர்ந்த பொருள்களிலும் ஏதேனும் குற்றம் இருத்தல் உலகவியல்பு: ஆனால் இச் சீதைக்கோ முழுவதும் குணமேயன்றிக் குற்றம் சிறிதுமில்லை என்பது. எடுத்துக் காட்டுவமையணி. திருமகள் தன்னிடத்தில் தங்குமாறு நிற்றலால் தாமரை மலரை 'கமலத் தெய்வப்பூ' என்றார். புல்லிதழ் - பண்புத் தொகை. 60 |