4510.'பூ வரும் மழலை அன்னம், புனை
      மடப் பிடி என்று இன்ன;
தேவரும் மருளத் தக்க
      செலவின எனினும் தேறேன்;
பா வரும் கிழமைத் தொன்மைப்
      பருணிதர் தொடுத்த, பத்தி
நா அருங் கிளவிச் செவ்வி நடை
      வரும் நடையள் -
நல்லோய்!

     நல்லோய் - நற்பண்புகளால் சிறந்தவனே!பூ வரும் - தாமரைப் பூவில்
வாழும் தன்மையுள்ள; மழலை - மழலைச் சொற்களையுடைய; அன்னம் -
அன்னப் பறவையும்; புனை மடப் பிடி - அழகிய இளைய பெண் யானையும்;
என்ற இன்ன -
என்று சொல்லப்பட்ட இவை; தேவரும் மருளத்தக்க
செலவின -
தேவர்களும் கண்டு திகைக்கக் கூடிய (சிறந்த) நடையையுடையன;
எனினும் -
என்றாலும்; தேறேன் - (அவற்றைச் சீதையின் நடைக்கு
உவமையாகக் கூறத்) தெளிவு கொள்ளேன்; பா வரும் - செய்யுள்
இயற்றுவதில் பொருந்திய; கிழமைத் தொன்மைப்பருணிதர் - உரிமையுடைய
பழமையான (புலமை மிக்க) புலவர்கள்; தொடுத்த - இயற்றிய; பத்தி -
ஒழுங்கான; நா அரும் கிளவி - நாவில் எழுகின்ற அரிய சொற்களையுடைய;
செவ்வி நடை வரும் நடையள் -
காவியங்களின் அழகிய நடையை ஒத்த
நடையையு டையவளாவாள்.

     உலகத்துப் பெண்கள் நடைக்கு உவமையாகக் கூறப்படுகின்ற அன்னப்
பறவை முதலியவற்றின் நடையைச் சீதையின் நடைக்கு ஒப்பாகுமென்று நான்
சிறிதும் கருதமாட்டேன்; பழைய புலமை மிக்க புலவர்கள் இயற்றியுள்ள
காவியங்களின் நடை ஒப்பற்று விளங்குவதுபோல இந்தச் சீதையின் நடையும்
ஒப்பற்று விளங்கும் என்பது. நடை வரு நடை - வரு: உவமஉருபு.  நூலிலும்
நடையுண்டு; பெண்களுக்கும் நடையுண்டு ஆதலால், நூலின் நடை சீதையின்
நடைக்கு உவமை கூறப்பட்டது.  பருணிதர் - புலவர்.                64