ஏழுகூட மலையை வானரர் அடைதல் 4531. | தாம கூடத் திரைத் தீர்த்த சங்கம் ஆம், நாம கூடு அப் பெருந் திசையை நல்கிய, வாம கூடச் சுடர் மணி வயங்குறும், - ஏமகூடத் தடங் கிரியை எய்தினார். |
தாமகூடத் திரைதீர்த்த சங்கம் ஆம் - ஒளியமைந்த சிகரங்களிலி ருந்து தோன்றுகின்ற அலைகளையுடைய ஆறுகளின் சங்கமம் ஆகிய; நாம கூடு அப்பெருந் திசையை நல்கிய - புகழுடன் கூடியதும் பெரியதும் ஆகிய அத்திசையைப் பாதுகாப்பதாகிய; வாம கூடச் சுடர் மணி வயங்குறும் - அழகிய தொகுதியாகிய ஒளியையுடைய இரத்தினங்கள் விளங்குகின்ற; ஏம கூடத் தடங்கிரியை - ஏமகூடமென்னும் பெரிய மலையை; எய்தினார் - போய் சேர்ந்தார்கள். பல புண்ணிய ஆறுகளின் சங்கமமும் மிகச் சிறந்த இரத்தினங்களும் நிரம்பப் பெற்றது ஏமகூடமலை என்பது. ஏமகூடம் - எட்டுக் குலகிரிகளில் ஒன்று. மேருவின் தெற்கு இமயத்துக்கப்பால் 9000 யோசனையில் உள்ளது என்ற அபிதான சிந்தாமணி குறிப்பிடுகிறது. தாமம் - ஒளி; நாமம் - புகழ்; வாமம் - அழகு; ஏமம் - பொன். திரிபு என்னும் சொல்லணி இப்பாடலில் வந்துள்ளது. முதலடியில் 'கூடம்' சிகரத்தையும், மூன்றாமடியில் தொகுதியையும் குறித்தது. 11 |