அதனை இராவணன் மலையென ஐயுறுதல் 4536. | அனையது நோக்கினார், அமிர்த மா மயில் இனைய, வேல் இராவணன், இருக்கும் வெற்புஎனும் நினைவினர், உவந்து உயர்ந்தும் ஓங்கும் நெஞ்சினர், சினம் மிகக் கனல் பொறி சிந்தும் செங் கணார். |
(வானரர்) அனையது நோக்கினார் - அந்த ஏமகூட மலையைக்கண்டு; அமர்த மாமயில் இனைய - அமிழ்தத்தை ஒத்த பெருமை மிக்க மயில் போல்வாளாகிய சீதை துயருறும் படி; வேல் இராவணன் - கூர்மையான வேலினையுடைய இராவணன்; இருக்கும் வெற்பு ஆம் - தங்கியுள்ள மலையாகும்; எனும் - என்று கருதுகின்ற; நினைவினர் - எண்ணமுடையவர்களாய்; உவந்து உயர்ந்து ஓங்கு நெஞ்சினர் - (அது குறித்து) மகிழ்ந்து பொங்கி வளர்கின்ற மனமுடையவர்களாய்; சினம் மிகக் கனல்பொறி சிந்தும் செங்கணார் - கோபம் அதிகப்படுவதால் தீப்பொறிகளைக் கக்கும் செந்நிறக் கண்களையுடையவர்களுமானார்கள். வானரர்கள், அம் மலையின் வளத்தைக் கண்டு அதை இராவணனது இருப்பிடமாகக் கருதி, விரைவில் சீதையைக் காணலாம் என்பதனால் மனப் பூரிப்பையும், சீதையைக் கவர்ந்த கொடுஞ் செயலினனான இராவணனது தன்மையை நினைத்ததால் தோன்றிய பெருஞ்சினத்தையும் ஒருங்கே கொண்டனர் என்பது. ஏமகூடத்தையே திரிகூடமென மயங்கினர் வானர வீரர். ஒரே காலத்தில் முரண்படும் இருவகை உணர்ச்சிகள் நிகழ்வதை இப்பாடல் உணர்த்துகிறது. உயர்ந்து ஓங்கு : ஒரு பொருட் பன்மொழி. 16 |