4537.'இம் மலை காணுதும்,
      ஏழை மானை; அச்
செம்மலை நீக்குதும், சிந்தைத்
      தீது' என
விம்மலுற்று உவகையின்
      விளங்கும் உள்ளத்தார்,
அம் மலை ஏறினார்,
      அச்சம் நீங்கினார்.

     இம்மலை - இந்த மலையிலே; ஏழை மானை - பேதைமைப்
பண்புடைய மான்போன்ற சீதையை; காணுதும் - பார்ப்போம் (அதனால்);
அச்செம்மலை -
அந்த இராமனது; சிந்தைத் தீது - மனத்துயரை; நீக்குதும்
-
போக்குவோம்; என - என்று நினைந்து (வானரர்கள்); விம்மல் உற்று -
பூரித்து; உவகையின் விளங்கும் உள்ளத்தார் - மகிழ்ச்சியால் விளங்குகின்ற
உள்ளம் உடையவர்களாய்; அச்சம் நீங்கினார் - பயம் நீங்கியவர்களாய்;
அம்மலை ஏறினார்  -
அந்த மலையில் ஏறினார்கள்.

     அந்த மலையே இராவணனிருக்கையெனத்  தெளிந்து சீதையைக்
காண்பது உறுதியென மனத்தில் கருதியவராய், அத் தேவியைக் கண்டு
அச்செய்தியை இராமனிடம் அறிவித்து அவனது மனத் துயரத்தைப்
போக்குவோமென எண்ணினார் வானரர்.  இராவணனையும் எதிர்க்க
நேரிடினும் கலங்கமாட்டார்கள் என்று குறிப்பாராய் 'அச்சம் நீங்கினார்'
என்றார்.                                                    17