பாலையின் வெம்மை

4542.புள் அடையா; விலங்கு
      அரிய; புல்லொடும்
கள் அடை மரன் இல;
      கல்லும் தீந்து உகும்;
உள் இடை யாவும்
      நுண் பொடியொடு ஓடிய;
வெள்ளிடை அல்லது ஒன்று
      அரிது; - அவ் வெஞ் சுரம்.

     அவ்வெஞ்சுரம் - அந்தக் கொடிய பாலைவனத்தில்; புள் அடையா -
பறவைகள் சென்ற தங்கமாட்டா; விலங்கு அரிய - மிருகங்களும் காண்பதற்கு
அரியன; புல்லொடும் கள் உடை மரன் இல - புல்லும் தேன் பொதிந்த
மலருடை மரங்களும் அடியோடு இல்லை; கல்லும் தீந்து உகும் - கற்களும்
எரிந்து சாம்பலாகிவிடும்; உள் இடை யாவும் - தன்னிடம் பொருந்திய
எல்லாப் பொருள்களும்; நுண் பொடியொடு ஓடிய - சிறு துகள்களாக மாறிப்
பறப்பதால்; வெள்ளிடை அல்லது - வெற்றிடமல்லது; ஒன்று அரியது -
வேறொன்றும் அங்குக் காணப்படாது.

     அந்தப் பாலைவனத்தில் பறவை முதலியன வருவதுமில்லை; மரஞ்செடி
கொடிகளும் வளர்வதுமில்லை; கற்களும் கரிந்து தீய்ந்து போகும்; குறிஞ்சி
முதலிய வேற்று நிலங்களிலிருந்து எப்பொருள் வந்தாலும் அவை யாவும்
துகளாகப் பறக்கின்ற வெப்பம் நிறைந்த வெற்றிடமாகவேயுள்ளது என்ற அப்
பாலைவனத்தின் கொடுமை கூறியவாறு.  வெள்ளிடை :வெற்றிடம்.      22