4543. நன் புலன் நடுக்குற,
      உணர்வு நைந்து அற,
பொன் பொலி யாக்கைகள்
      புழுங்கிப் பொங்குவார்,
தென் புலம் தங்கு
      எரி நரகில் சிந்திய
என்பு இல் பல் உயிர்
      என, வெம்மை எய்தினார்.

     நன்புலன் நடுக்குற - (அங்கே சென்ற வானர வீரர்கள்) நல்ல
ஐம்பொறிகளும் நடுங்கவும்; உணர்வு நைந்து அற - அறிவு தேய்ந்து
ஒழியவும்; பொன் பொலியாக்கைகள்- பொன் போல விளங்கும் உடல்கள்;
புழுங்கிப் பொங்குவார் -
வியர்த்து மனம் கொதிப்பவர்களாய்; தென்புலம்
தங்கு -
தெற்குத் திசையில் இருக்கின்ற; எரி நரகில் - (எமனது); எரியும்
நரகத்தில்; சிந்திய - விழுந்து வருந்துகின்ற; என்பு இல் பல் உயிர் என -
(எலும்பில்லாத உடம்பையுடைய) புழு முதலான பல உயிர்த்தொகுதிகளைப்
போல; வெம்மை எய்தினார் - கொதிப்பையடைந்தார்கள்.

     அங்கே சென்ற வானரர்கள் நிலத்தின் வெம்மையைப் பொறுக்க
முடியாமல் புழுத்துடிப்பதுபோலத் துடித்தார்கள் என்பது.  வானரர்கள்
வெயிலில் துடிப்பதற்கு என்பு இல் பல்லுயிர் துன்பப்படுவதை உவமை
கூறினார்.  தென்புலத்தவன்: எமன்.  என்பு இல் பல் உயிர்: புழுக்கள்.
'என்பிலதனை வெயில்போலக்காயுமே' - குறள்: 77                     23