4544. | நீட்டிய நாவினர்; நிலத்தில் தீண்டுதோறு ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர்; காட்டினும் காய்ந்து, தம் காயம் தீதலால், சூட்டு அகல்மேல் எழு பொரியின் துள்ளினார். |
நீட்டிய நாவினர் - (அந்த வானரர்கள் நீர் வேட்கையால்) வெளியே தொங்கிய நாக்கையுடையவர்களாயினர்; நிலத்தில் தீண்டுதோறு ஊட்டிய - நிலத்தில் அடிவைக்கும் தோறும் கீழிருந்து தாக்கிய; வெம்மையால் - வெப்பத்தால்; உலையும் காலினர் - கொப்புளம் கண்ட அடிகளையுடையவர்களுமாயினர்; காட்டினும் காய்ந்து - அப் பாலைவனத்தைக் காட்டிலும் மிகுதியாகச் சூடேறி; தம் காயம் தீதலால் - தங்கள் உடம்பு கரிந்து தீய்ந்ததால்; சூட்டுஅகல்மேல் எழு பொரியின் - சூடு கொண்ட சட்டியிலிருந்து மேலெழுகின்ற நெற்பொரிகள் போல; துள்ளினார் - துடித்தார்கள். மிகுந்த நீர் வேட்கையால் நாவை வெளியே நீட்டுதலும், பொறுக்கமுடியாத மிக்க வெப்பத்தால் கால்கள் கொப்புளித்தலும் இயல்பு. நெருப்பினால் வெம்மையடைந்த சட்டியில் நெல் பொரிந்து மேலெழுவது போல வானரவீரர்கள் பாலைவனத்தின் மிக்க வெம்மையால் துடித்தார்கள் என்பது உவமையணி. 24 |