4559.புக்க நகரத்து இனிது
      நாடுதல் புரிந்தார்;
மக்கள் கடை, தேவர் தலை,
      வான் உலகின், வையத்து,
ஒக்க உறைவோர் உருவம்
      ஓவியம் அலால், மற்று,
எக் குறியின் உள்ளவும்,
      எதிர்ந்திலர், திரிந்தார்.

     புக்க நகரத்து - (வானர வீரர்கள் தாங்கள்) நுழைந்த அந்த நகரத்தில்;
இனிது நாடுதல் புரிந்தார் -
மகிழ்ச்சியோடு தேடத் தொடங்கினார்கள்;
தேவர் தலை -
தேவர்கள் முதலாக; மக்கள் கடை - மனிதர்கள் ஈறாக;
வான் உலகின் -
வானுலகத்திலும்; வையத்து - நிலவுலகத்திலும்; ஒக்க
உறைவோர் உருவம் -
ஒரு சேரப் பொருந்தி வாழுகின்றவர்களின்
உருவங்கள்; ஓவியம் அலால் - சித்திர வடிவங்களாக அல்லாமல்; மற்று
எக்குறியின் உள்ளவும் -
வேறு உயிருடைட எந்தப் பொருள்களையும்;
எதிர்ந்திலர் -
காணப் பெறாதவர்களாய்; திரிந்தார் -  (அந்த நகர்
முழுவதும்) சுற்றி அலைந்தார்கள்.

     தேவர்கள், மனிதர்கள் ஆகியோரின் உருவங்கள் சித்திரவடிவமாகக்
காணப்பட்டனவேயல்லாமல் மெய்ம்மையான வடிவமுடை ஓர் உயிராவது அந்த
நகரத்தில் காணப்படவில்லை என்பது.  மக்கள் தேவர் என்ற முறைக்கேற்ப
வையம், வானுலகு என்று நிறுத்தாது மாற்றி நிறுத்தியது எதிர் நிரல் நிறைப்
பொருள்கோளாகும்.                                             39