4567. | தேர் அனைய அல்குல், செறி திண் கதலி செப்பும் ஊருவினொடு ஒப்பு உற ஒடுக்கி, உற ஒல்கும் நேர் இடை சலிப்பு அற நிறுத்தி, நிமிர் கொங்கைப் பாரம் உள் ஒடுங்குற, உயிர்ப்பு இடை பரப்ப, |
தேர் அனைய அல்குல் - தேர்த்தட்டையொத்த அல்குறை; செறி திண் கதலி செப்பும் - ஒன்றோடு ஒன்று நெருங்கிய வலிய வாழை மரத்தைப் போன்ற; ஊருவினொடு - தொடைகளோடு; ஒப்பு உற ஒடுக்கி - ஒன்றாகப் பொருந்துமாறு அடக்கி வைத்தும்; உயிர்ப்பு இடை பரிப்ப - மூச்சைக் கட்டுவதனால்; உற ஒல்கும் நேர்இடை - மிகவும் அசைகின்ற நுண்ணிய இடையை; சலிப்பு அற நிறுத்தி - சிறிதும் அசையாதவாறு நிறுத்தி; நிமிர் கொங்கைப் பாரம் - சாயாது நிமிர்ந்த முலைச்சுமை; உள் ஒடுக்கு உற - உள்ளே அடங்கி நிற்பவும். உயிர்ப்பிடை பரித்தல் இடை சலிப்பற நிற்றற்கும், முலைகள் ஒடுங்குவதற்கும் காரணமாகும். இங்குக் கூறப்படுவது யோகமுறையில் வளிநிலை என்பர். இயமம், நியமம், ஆசனம், பிராயாணாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி, என்னும் யோகப்பயிற்சி நிலைகளில் இங்கு பிராணாயாமம் குறிக்கப்பட்டது. 'உயிர்ப்பிடை பரித்தல்' என்பதுவே பிராணாயாமம். சலிப்பு: அசைவு, 'ஒடுக்கி', 'ஒடுக்குற', என்ற எச்சங்களும் 50ஆம் செய்யுளில் வரும் 'இருந்தனள்' என்பதனையே கொண்டு முடியும். 47 |